ஜாம்பவான் வீரர் கபில்தேவ், 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வினை ஆடும் லெவனியில் இருந்து கழற்றி விடும் போது, மோசமான ஃபார்மில் இருக்கும் கோலியையும் டி20 போட்டிகளில் இருந்து கழற்றி விட வேண்டியது தானே? என்று கேள்வியெழுப்பி எழுப்பி இருந்தார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அவர் கடந்த 3 ஆண்டுகளாகவே பெரிய அளவில் ரன்கள் குவிக்க மிகுந்த சிரமப்பட்டு வருகிறார். இதனால், அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கோலி, அவர் கேப்டனாக இருந்தபோது, கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டு மீண்டும் கடந்த ஜூலை 1ம் தேதி நடத்தப்பட்ட 5வது மற்றும் கடைசி டெஸ்டில் மொத்தமாகவே 31 ரன்கள் தான் எடுத்திருந்தார்.
பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் கடைசி 2 ஆட்டத்தில் களமாடிய கோலி 1, 11 என ரன்கள் எடுத்து மீண்டும் ஏமாற்றம் கொடுத்தார். அதன்பிறகு, தற்போது நடந்து வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது ஒருநாள் ஆட்டத்தில் கோலி 25 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து மீண்டுமொருமுறை பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தார். கோலி இப்படி ரன் சேர்க்க திணறி வருவதை கவனித்து வரும் முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ஆர்வலர்களும் அவர் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த ஜாம்பவான் வீரர் கபில்தேவ், 450 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வினை ஆடும் லெவனியில் இருந்து கழற்றி விடும் போது, தனது நீண்ட கால மோசமான பேட்டிங்கிற்கு பிறகு விராட் கோலியையும் டி20 போட்டிகளில் இருந்து கழற்றி விட வேண்டியது தானே? என்று கேள்வியெழுப்பி எழுப்பி இருந்தார். இதேபோல், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், விராட் கோலிக்கு இந்திய அணி தொடர்ச்சியான வாய்ப்பு வழங்குவதை கடுமையாக தாக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கோலியின் மோசமான ஃபார்ம்க்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜய் ஜடேஜா, சச்சின் டெண்டுல்கருக்கு போன் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
“விராட் கோலி தற்போது படும் சிரமத்தை எதிர்கொண்டவர் டெண்டுல்கர் மட்டுமே. எனவே கோலி போன் செய்ய அவருக்கு தான் என்று 8 மாதங்களுக்கு முன்பு நாங்கள் இதைப் பற்றி பேசும்போது கூறினேன். ஏனென்றால், டெண்டுல்கரை போல் 14 அல்லது 15 வயதிலிருந்தே கிரிக்கெட் என தன்னை அர்பணித்துக்கொண்டு, அவரைப்போல் உச்சம் தொட்டவர் விராட் கோலி. எனவே அவரிடம் தான் கோலி ஆலோசனை பெற வேண்டும் என்றேன்.
தவிர, வேறு யாரையும் என்னால் நினைக்க முடியாது, ஏனென்றால் எல்லாமே மனதில் இருப்பதாக நான் நம்புகிறேன். எனவே, அவர் டெண்டுல்கரிடம் இருந்து ஒரு அழைப்பு தூரத்தில் உள்ளார். விராட் அழைக்காவிட்டாலும்… உண்மையில் சச்சின் தான் அவருக்கு அழைப்பு கொடுக்க வேண்டும் என்று நம்புகிறேன். சில நேரங்களில், இளைஞர்கள் அந்த கடிமான கட்டத்தில் இருக்கிறார்கள். நீங்கள் வயதாகும்போது, அதை நீங்கள் கடந்துவிட்டதால், அந்த அழைப்பைச் செய்வது உங்கள் கடமை. மாஸ்டர் அதை செய்வார் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலிக்கு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கூறுகையில், “கோலி பந்து வீச்சுகளை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விட்டுச் செல்ல வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
“விராட் கோலிக்கு எதிரணிகள் எப்போதும் அங்கேயே (அவுட் ஆஃப் ஸ்டம்புக்கு) பந்துவீசுவார்கள். அவர் எந்த டெலிவரிகளை விட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஷார்ட் மற்றும் ஃபுல் லெந்த் பந்துகளை அவர் நன்றாக சமாளிக்கிறார்.
ஒவ்வொரு இன்னிங்ஸும் அவர் மீது அழுத்தத்தை குவிக்கப் போகிறது. மேலும் அவருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தலாம். மக்கள் அவரை நினைவுபடுத்துகிறார்கள். அது அவருக்கு வலு சேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அந்த டி20 போட்டிகளில் விளையாடியிருந்தால், அவர் தொடர்பில் இருந்திருப்பார். இந்த இடைவேளை அவருக்கு உதவுமா என்று தெரியவில்லை. அடுத்த இன்னிங்ஸ் அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமதுவும் கோஹ்லி முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டாத இந்த குழப்பத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், கோலி கிரிக்கெட்டில் இருந்து சுமார் 3-4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அகமது கருதுகிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில், விராட் கோலி ஒரு பெரிய தொடரில் இருந்து விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அவர் கிரிக்கெட்டில் இருந்து 3-4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். நான் கைவிடப்பட்டபோது, அல்லது ஓய்வெடுக்கும் போது, என் சக தோழர்களை தொலைக்காட்சியில் பார்த்தபோது, அது என் மனநிலையை அதிகமாக பாதித்தது. அப்படி ஓய்வு எடுக்கும்போது உங்கள் பயிற்சியில் நீங்கள் அதிக தீவிரம் அடைவீர்கள்.
“மூன்று மாதங்களுக்குப் பிறகு விராட் திரும்பினால், அவர் டெஸ்டில் 27 சதங்கள் அல்லது ஒருநாள் போட்டிகளில் 40+ சதங்கள் அடித்ததை மறந்துவிடுவார். பின்னர், அவர் ஒரு புதிய தொடக்கத்தை எடுப்பார். மேலும் சரிவு நிலைகள் உயரும். யாராவது பசியுடன் இருந்தால், அவர்கள் மகிழ்வார்கள். உணவு இன்னும் அதிகமாக உள்ளது. கிரிக்கெட்டிலும் இதே நிலைதான். 3-4 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் திரும்பி வரும்போது, உங்கள் ஆற்றல் நிலை மற்றும் மனநிலை முற்றிலும் மாறிவிடும்.” என்று முஷ்டாக் அகமது கூறியுள்ளார்
கோலி குறித்து பலரும் பல விதமாக தெரிவித்தாலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். இதனிடையே, 2-வது போட்டி ஒருநாள் ஆட்டம் முடிவடைந்ததும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:
விராட் கோலி ஏராளமான போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர், சிறந்த பேட்ஸ்மேன். அணியில் அவரது இடம் குறித்து மறு உறுதியளிக்க தேவையில்லை. நான் முன்பு கூறியது போல், ஃபார்ம் என்பது ஏற்ற, இறக்கங்கள் கொண்டது, தற்காலிகமானது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையிலும் இது ஒரு பகுதியாகும். சிறந்த கிரிக்கெட் வீரர் கூட ஏற்ற, தாழ்வுகளில் பங்களிப்பார்.
இந்திய அணிக்காக பல்வேறுபோட்டிகளில் வெற்றி தேடிக்கொடுத்த ஒருவருக்கு, மீண்டும் எழுந்து வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ்கள் தேவை. அதைத் தான் நான் உணர்கிறேன். கிரிக்கெட்டை பின்தொடர்பவர்களும் அதேபோன்றே நினைப்பார்கள் என கருதுகிறேன்.
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று எனக்குத் தெரியும், ஆனால் நாங்கள்பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம், வீரர்கள் ஏற்ற தாழ்வுகளைக் கடந்து செல்கிறோம், ஆனால் தரம் ஒருபோதும் மறைந்துவிடாது, அதை நாம் மனதில் கொள்ள வேண்டும். விராட் கோலியின் கடந்த கால சாதனைகள், அவர் அடித்த சதங்களின் எண்ணிக்கை, சராசரியைப் பாருங்கள். அவர், அனுபவம் வாய்ந்த வீரர்.” என்று கூறியுள்ளார்.