“உண்மையான குற்றச்சாட்டுதான். தன்னைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டு, சொந்தக் கட்சி அலுவலகத்தையே சூறையாடியவர்கள் இந்த உலகத்தில் உண்டா… ‘தொகுதிப் பிரச்னைக்காக முதல்வரைச் சந்தித்தேன்’ என்று சொல்கிறார் ரவீந்திரநாத். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தொகுதி விஷயம் தொடர்பாக முதல்வரைச் சந்தித்துப் பேசியது உண்டா… அப்போது இல்லாத தேவை இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது… அம்மாவழியில் என்று பேசும் இவர்கள், அம்மா இருந்திருந்தால் தி.மு.க-வைப் புகழ்ந்து பேசியிருக்க முடியுமா… தலைமைக் கழகத்துக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று காவல்துறையில் மனு அளித்திருந்தோம். அதற்குக் காவல்துறை தரப்பிலிருந்து எந்த பதிலும் தரவில்லை. கலவரம் நடக்கும்போது அங்கு வந்த காவலர்களும் கலவரம் செய்தவர்களை விட்டுவிட்டு, அங்கு நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க தொண்டர்களை அடித்திருக்கிறார்கள். ஓ.பி.எஸ்-ஸை அலுவலகத்திலிருந்த ஆவணங்களையெல்லாம் எடுத்துச் செல்ல வழிவிட்டு அனுமதித்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் தலைமைக் கழகம் சீல் வைக்கப்பட்டிருக்கிறது. போதிய பாதுகாப்பு அளித்திருந்தால், தலைமைக் கழகம் சூறையாடப்பட்டிருக்குமா… நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே எங்களின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில்தான் இருக்கின்றன. ‘அம்மாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது’ என்று சொன்னதும் அவர்தான். ‘ஆறுமுகசாமி ஆணையத்தில் எனக்கு எதுவுமே தெரியாது’ என்று சொன்னதும் அவர்தான். தன் பதவிக்கு ஏதாவது ஒரு சிக்கல் என்றால், எது வேண்டுமென்றாலும் பேசுவார், என்ன வேண்டுமென்றாலும் செய்வார்!”
“ஓ.பி.எஸ் மீது வீண் அவதூறுகளைப் பரப்பிவருகிறார்கள். அவர், ‘தனது தந்தை கலைஞருக்கு ரசிகன்’ என்று சொன்ன காலம் என்பது, அ.தி.மு.க தொடங்கப்படாத காலம். அது எம்.ஜி.ஆர்., கலைஞரின் வசனங்களில் படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘ஜனநாயகத்தோடு சட்டமன்றம் நடைபெறுகிறது’ என்று செங்கோட்டையன் சொன்னாரே… உதயகுமார் முதல் செல்லூர் ராஜூ வரை ‘தி.மு.க ஆட்சி சிறப்பாக நடக்கிறது’ என்று சொன்னார்களே… அப்படியானால், அவர்களெல்லாம் தி.மு.க-வின் ஆதரவாளர்களா… பாராட்டுவது என்பது பண்பாடு. தலைமைக்குப் போட்டியாக ஓ.பி.எஸ் வந்தது முதலே எடப்பாடி தரப்பு உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பிவருகிறது. கூவத்தூரில் தொடங்கி இன்று வானகரம் வரை தனது வாங்கும் சக்தியால் அ.தி.மு.க-வை அபகரிக்க நினைக்கிறார் பழனிசாமி. அம்மாவின் ஜீவநாடியே தி.மு.க எதிர்ப்புதான். அப்படிப்பட்டவர், தான் பதவி விலகும் சூழலில் தனது இருக்கையை ஓ.பி.எஸ்-ஸுக்குத்தான் வழங்கினார். நம்பிக்கையான அனைத்துப் பொறுப்புகளையும் அம்மா ஓ.பி.எஸ்-ஸுக்கு மட்டும்தான் கொடுத்திருந்தார். தனக்குப் பின்னல் கட்சியில் அடுத்தது யார் என்று அம்மா அடையாளம் காட்டியது ஓ.பி.எஸ்-ஸை மட்டும்தான். கட்சிக்காக நம்பிக்கையாக அயராது உழைத்த ஓ.பி.எஸ் மீது இன்று அபாண்ட குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அன்று பொருளாளர் பதவியிலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். அன்றைய அரசியல் களம் அவரின் கைவசமானது. அதேபோல, இன்றைய அ.தி.மு.க ஓ.பி.எஸ் கைக்கு உறுதியாக வந்து சேரும்!”