சென்னை: அதிமுகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தமிழகஅரசு சீல் வைத்துள்ளதால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை சென்னையில் உள்ள அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் ஒபிஎஸ்-ன் துணை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அவரது பொருளாளர் பதவியும் பிடுங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியையும் பிடுங்க எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல், வாக்களிப்பது தொடர்பாக ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், சட்டப்பேரவை கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஏற்பட்ட மோதல் காரண மாக, தமிழகஅரசு அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளது. இதனால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாத நிலையில், அடையாறு பிளாசா ஓட்டலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுகவில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 62 எம்எல்ஏக்கள் பழனிசாமி தரப்பிலும், 3 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் தரப்பிலும் உள்ளனர். குடியரசு தலைவர் அதிமுகவின் ஆதரவை பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு ஏற்கனவே நேரில் சந்தித்து கேட்டுள்ள நிலையில், அது தொடர்பாக விவாதிக்க நாளை அதிமக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடுகிறது.
குடியரசுத்தலைவர் தேர்தல் வரும்18-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவை அதிமுக ஆதரிப்பது மற்றும், கட்சியின் ஒற்றைத் தலைமை, தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ள விவகாரம் மற்றும், ஓபிஎஸ்ன் சட்டமன்ற துணைஎதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெற உள்ளது. முதல் எடப்பாடி வீட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் வீடு அரசுடையது என்பதால் கட்சி சார்ந்த எம்எல்ஏக்கள் கூட்டம் ஓட்டலில் நடைபெறுகிறது.