தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெறும் நிலையில், 18.72 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர். நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அரியலூர் ரயில்வே காலனியை சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு நிஷாந்தி என்ற மகளும் நிஷாந்த் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், மகள் நிஷாந்தி கடந்தாண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் 529.35 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதித் தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் இருக்கும் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை சமையலறைக்குச் சென்ற தாய் உமா, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியலூர் போலீசார், மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து அரியலூர் டிஎஸ்.பி வெங்கடேசன் கூறுகையில், மாணவி நிஷாந்தி ஆங்கிலத்தில் தனது குடும்பத்தினருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது அப்பா அரியலூரிலே வந்து இருக்க வேண்டும் எனவும் நீட்டில் வேதியியல் மற்றும் உயிரியில் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாவும் உருக்கமாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக கூறினார்.