மூணாறு: தொடரும் கனமழையால் மூணாறில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழந்தார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி, கனமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தின் பல இடங்களில், மண்சரிவோடு, மரங்களும் வேரோடு சாய்ந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழையால், மூணாறு லட்சுமி எஸ்டேட்டில் உள்ள ஒரு வீட்டின் மீது மண் சரிந்து விழுந்ததில், பண்டாரம் (75) என்பவர் உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். இம்மாவட்டத்தில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மூணாறு அருகே மறையூரில் நின்று கொண்டிருந்த காரின் மீது மரம் சாய்ந்து விழுந்தது. இதேபோல், பழைய மூணாறில் எட்டுமுறி பகுதியில் மண் சரிந்து விழுந்து 2 வீடுகள் சேதமடைந்தன. மாட்டுப்பெட்டி சாலையில் உள்ள கலால் வரி அலுவலகம் அருகே சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறியுள்ளது. கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோட்டில் பாறைகள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் மூணாறு – தேனி சாலையில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சாலையில் விழுந்து கிடக்கும் மண்சரிவையும், மரங்களையும் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.