புதுடெல்லி: ‘குழந்தைகளே காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு செல்கையில், நீதிபதிகளும், வக்கீல்களும் காலை 9.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வர முடியாதா?’ என உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான பணி நேரம் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரையாகும். இந்நிலையில். உச்ச நீதிமன்றத்தின் 2வது அமர்வின் நீதிபதியான யு.யு.லலித் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக 9.30 மணிக்கு வழக்கு விசாரணையை தொடங்கினார். அப்போது, வேறு ஒரு வழக்கில் ஆஜராக வந்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘இன்றைய தினம் வழக்கு விசாரணை 9.30 மணிக்கு துவங்கி விட்டது. அதனால், ஆஜராவதில் சிக்கல் ஏற்பட்டது’ என தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த நீதிபதி யு.யு.லலித், ‘குழந்தைகள் கூட காலை 7.30 மணிக்கே பள்ளிக்கு செல்லும் போது நீதிபதிகளாகிய நாங்களும், வழக்கறிஞராகிய நீங்களும் ஏன் காலை 9.30 மணிக்கு நீதிமன்ற பணிக்கு வரக்கூடாது? இது வரும் காலத்தில் தொடர் நடவடிக்கையாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது,’ என கூறினார். அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு லலித் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.