ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 2022 யூலை 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவருமாறு ஜனாதிபதிப் பதவியினை இராஜினாமாச் செய்திருப்பதனால் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 05வது உறுப்புரைக்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக இன்று (15) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அரசியலமைப்பின் 38(1) (ஆ) உறுப்புரைக்கு அமைய, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை குறித்து கௌரவ சபாநாயகருக்கு 2022ஆம் ஆண்டு யூலை 14ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தையும் செயலாளர் நாயகம் சபையில் சமர்ப்பித்தார்.

ஜனாதிபதியின் இராஜினாமாக் கடிதமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது உறுப்புரைக்கு அமைய, பாராளுமன்றம் கலைக்கப்படாத சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்படும்போது, அவ்வாறான வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றத்தைக் கூடுமாறு அழைப்பதாகச் செயற்படுதல் வேண்டும் ஏன்பதால், பாராளுமன்றச் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பதற்காக என்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செயலாளர் நாயகம் சபையில் வாசித்தார்.

அத்துடன், மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்தின் 05வது உறுப்புரைக்கு அமைய இன்றைய தினக் கூட்டத்திலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்கு முந்தாததும் ஏழு நாட்களுக்குப் பிந்தாததுமான தினத்தை வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட வேண்டும். இதற்கான திகதியாக 2022 யூலை மாதம் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்குப் பாராளுமன்றம் கூடி வேட்புமனுக்களைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை முன்னெடுக்கப்படும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதி கருதி இதனுடன் தொடர்புடைய சட்டத்தின் 06வது உறுப்புரையில் உள்ள விடயங்களுக்கு அமைய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான  விபரங்களையும் செயலாளர் நாயகம் சபையில் தெரிவித்தார்.

  • பாராளுமன்றச் செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராகச் செயற்படுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கென எவரேனும் உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பும் ஒவ்வோர் உறுப்பினரும், அவர் எந்த உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பகிறாரோ, அந்த உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதி பதவியில் அவர் சேவை செய்ய விருப்புடையவராகவுள்ளார் எனக் கூறும் எழுத்திலான சம்மதத்தை அத்தகைய உறுப்பினரிடமிருந்து முன்னர் பெற்றுக்கொண்டிருத்தல் வேண்டும். அத்துடன் இதன் பிரதியொன்று வேட்புமனுக்களைப் சமர்ப்பிக்கும் 2022 யூலை 19ஆம் திகதி கையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
  • வேட்புமனுக்களைக் கையளிக்கும் தினத்தன்று, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு எதிர்பார்த்திருக்கும் உறுப்பினர் கட்டாயம் சபையில் சமுகமளித்திருக்க வேண்டும் என்பதுடன், குறித்த உறுப்பினரின் பெயர் மற்றுமொரு உறுப்பினரினால் வழிமொழியப்பட வேண்டும். இதனை விவாதத்துக்கு உட்படுத்த முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
  • ஒரு உறுப்பினரின் பெயர் மாத்திரம் 2022 யூலை 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருந்தால் அந்த உறுப்பினர் அத்தகைய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென்பது என்னால் அறிவிக்கப்படும்.
  • இருந்தாலும், 2022 யூலை 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருந்தால் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்திலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குப் பிந்தாத ஒரு திகதியாக இருக்க வேண்டும் என்பதுடன், இதற்கான திகதி மற்றும் நேரம் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
  • இதற்கமைய தற்பொழுது உத்தேசிக்கப்பட்டுள்ளமைக்கு ஏற்ப பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்ட 2022 யூலை 20ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றம் கூடி ஜனாதிபதிப் பதவி வெற்றிடத்துக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
  • அதேபோல், கௌரவ உறுப்பினர்களே, வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு ஒரு குறிப்பிட்ட உறுப்பினரின் பெயரை முன்மொழியும் போது, ​​ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அரசியலமைப்பின் 92 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின்மைகளை கவனத்தில் கொள்வது அவசியம் என்பதையும் உங்கள் அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இன்று பாராளுமன்றம் மு.ப 10.00 மணிக்குக் கூடியதுடன், மேலே குறிப்பிடப்பட்ட அறிவுப்புக்களைத் தொடர்ந்து மு.ப 10.15 மணிக்கு பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி மு.ப 10.00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

எச்.ஈ. ஜனகாந்த சில்வா,
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.