தமிழ் நாள் விழா | சென்னையில் கண்காட்சி, மனற்சிற்பம், கருத்தரங்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ் நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் கண்காட்சி, மனற்சிற்பம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விழா வரும் 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் கண்காட்சி, மனற்சிற்பம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், ஜூலை 18ம் நாள் காலை 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றவுள்ளார்கள். தமிழ்நாடு நாள் விழாவில், கருத்தரங்கம், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக குறும்படம் திரையிடல் மற்றும் விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகின்றது.

இவ்விழாவில் காலை 9.00 மணியளவில் மாநிலத் திட்டக் குழு, துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் தலைமையில், கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில், சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் “தமிழ்நாடு உருவான வரலாறு”, ஆழி செந்தில்நாதன் “மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்”, வாலாசா வல்லவன் “தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்”, முனைவர் இராசேந்திரன் “தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன்”, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் “முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு” ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றுகிறார்கள்.

இவ்விழாவினை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இலக்கியமாமணி விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது, கபிலர் விருது, உ.வே. சா விருது, அம்மா இலக்கிய விருது, காரைக்கால் அம்மையார் விருது கிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையுரையும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் முன்னிலையுரையும் ஆற்றவுள்ளார்கள்.

தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு நில அளவைத் துறை சார்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் தற்போது வரையிலான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக, தமிழ்நாடு நாள் வரலாறு குறித்தும், தமிழ்நாடு நாள் சட்டமன்ற தனித் தீர்மானம் குறித்தும் பல்வேறு அறிஞர் பெருமக்கள் வழங்கிய கருத்துரைகளை உள்ளடக்கிய நூல் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது.

இந்நிகழ்ச்சியினையொட்டி, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்மிக்க மணற்சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக்கால் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பமும் உருவாக்கப்படுகிறது.

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சியினை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கண்டுகளிக்கும் வகையில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை காட்சிப்படுத்தப்படுகிறது” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.