புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரிடமும் பேசி பாஜகவுக்கு எதிராக ஒருமித்த குரல் கொடுப்பது பற்றி ஆலோசித்துள்ளார் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருடன் பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும் பேசியுள்ளார். நேற்று மாலை தொலைபேசியில் பேசி நலம் விசாரித்ததோடு மத்திய அரசினை எதிர்த்து குரல் கொடுப்பது பற்றியும் பேசினார்.
அன்று நேசம்; இன்று காட்டம்: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிற்கு ஆரம்பத்தில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்தவர் தான். ஆரம்பத்தில் கேசிஆரின் ஆதரவு பாஜகவுக்கும் பலன் தந்தது. ஆனால் சமீபமாக மத்திய அரசு மிகவும் காட்டமாக விமர்சிப்பவர்களில் முதலிடத்தில் இருக்கிறார். மோடி அரசை வீழ்த்தி மத்தியில் பாஜக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்
அண்மையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் 21வது நிறுவன நாளில் பேசிய சந்திரசேகர ராவ், நாட்டை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்றுவேன் என்று உறுதிமொழி ஏற்றார்.
ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து 25-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும். புதிய குடியரசு துணைத் தலைவர் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்பார்.