புதுடெல்லி: பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கு, கரோனா பூஸ்டர் தடுப்பூ சியை இலவசமாக செலுத்தும் பணி நாடு முழுவதும் நேற்று தொடங்கியது.
நாடு விடுதலை அடைந்து 75-ம் ஆண்டு நிறைவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள அரசு கரோனா தடுப்பூசி மையங்களில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று முதல் 75 நாட்களுக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அமைச்சர் தொடங்கினார்
அதன்படி இந்த கரோனா தடுப்பூசி முகாமை டெல்லியில் உள்ள நிர்மன் பவனில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
நாட்டில் 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட 77.10 கோடி பேரில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 25.84 சதவீதம் பேர் கரோனா பூஸ்டர் தடுப்பசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
உடலில் எதிர்ப்பு சக்தி
நாட்டின் மக்கள் தொகையில்பெரும்பாலானோர் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பொது இடங்களில் சிறப்பு முகாம்களை நடத்தி, கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வலியுறுத்தியுள்ளார்.
20,038 பேருக்கு பாதிப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20,038 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,37,10,027-ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,39,073-ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 47 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
கரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 5,25,604-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 16, 994 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,45,350-ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 199.47 கோடி கரோன தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.