அன்று சைக்கிளில் சுற்றித் திரிந்தவர் இன்று 5 ஆயிரம் கோடிக்கு அதிபதி என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு:-
அதிமுகவில் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ் தற்போது தனித்தனியே பிரிந்து கிடக்கின்றனர். ஜூலை 11ஆம் தேதி கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே பழனிசாமி (இபிஎஸ்), முன்னாள் முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு நீக்கினார்.
இதற்கிடையில் ஓ.பி.எஸ்.,ஸின் ஆதரவாளர் கோவை செல்வராஜ், ‘ஆர்.பி. உதயகுமார், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் ஆர்.பி. உதயகுமார், சைக்கிளில் சென்றார். இன்று 5 ஆயிரம் கோடிக்கு அவர் அதிபதி ஆனது எப்படி? ஜெயலலிதாவிடம் ஆர்பி உதயகுமாரை அறிமுகப்படுத்தி வைத்து கட்சியில் வளர்த்துவிட்டது ஓ.பன்னீர் செல்வம்தான். ஆனால் இன்று அவர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து பேசுகிறார்” என்று பேசியிருந்தார்.
ஆர்.பி. உதயகுமார் காட்டமான பதில்:-
இதற்கு காட்டமாக காணொலி வாயிலாக பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ‘ஓ.பன்னீர் செல்வத்தை அண்ணனாக நினைத்து பொதுவெளியில் மரியாதையுடன் பேசிவருகிறேன். கோவை செல்வராஜ் ஒரு வெத்து வேட்டு. நான் சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே கழகத்துக்காக போராட்டத்தில் ஈடுபட்டு தேர்வு கூட எழுதாமல் சிறைக்கு சென்றேன்.
இதைப் பார்த்து எனக்கு ஜெயலலிதா மாணவர் அணியில் பொறுப்பு கொடுத்தார். அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளேன்.
ஓபிஎஸ்-ஐ நினைத்தால் பரிதாபம்:-
இந்த நிலையில் அதிமுகவின் வரலாறு தெரியாத முட்டாள்களுக்கு தலைமை தாங்கும் ஓபிஎஸ்-ஐ நினைத்தால் பரிதாபமாக உள்ளது.
மேலும் 2001இல் அதிமுக தொண்டர்களின் உழைப்பால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகி, வருவாய்துறை அமைச்சர் ஆகி, பின்னர் முதல்வராகி இன்று என்ன ஆனாலும் பரவாயில்லை அதிமுகவை அழிப்பேன் என செயல்படும் ஓ.பன்னீர் செல்வம் அவர்களே.. நீங்கள் உதயகுமாரை சீண்டிப் பார்க்க வேண்டாம்.
தலை காட்ட முடியாது:-
மிரட்டிப் பார்க்க வேண்டாம். வருமான வரித்துறை சோதனைக்கும் பயந்தவன் நான் அல்ல. என் வீட்டின் கதவுகள் திற்ந்தே இருக்கும். ஆகவே கோவை செல்வராஜ் போன்ற கைக்கூலிகளை வைத்துக்கொண்டு என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம்.
ஒரே நேரத்தில் என் வீட்டிலும் ஓ.பன்னீர் செல்வம் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தட்டும். யார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்கள் என்று தெரியும். நான் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தால் அரசியலை விட்டு விலகத் தயார். ஓ.பன்னீர் செல்வம் தயாரா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
தொண்டர்கள் அதிர்ச்சி:-
மேலும் இதுபோன்ற பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் என்னிடத்தில் ஆகாது. நான் கட்சி மற்றும் தொண்டர்களின் நலனுக்காக செயல்பட்டுவருகிறேன். என்னை மிரட்டிப் பார்க்கும் ஓபிஎஸ் குறித்து உண்மைகளை வெளியிட்டால், வெளியில் தலை காட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ்- இபிஎஸ் சண்டையில் அவரது ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊழல் புகார்களை தெரிவித்துவருகின்றனர். இது சாதாரண அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி குறித்து அதிமுக மூத்தத் தலைவர் பொன்னையன் தெரிவித்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவு கூரத்தக்கது.