பீகார் மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவரை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக காவல்துறை 3 பேரைக் கைது செய்துள்ளது. கடந்த 11-ம் தேதி பாட்னா-வின் நயா டோலா பகுதியில் காவல்துறை நடத்திய சோதனையில் முகமது ஜலாலுதீன், அக்தர் பர்வேஸ் என்ற தீவிரவாதிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அர்மான் மாலிக் என்ற நபரும் சிக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பு செய்தியாளர்களிடம், “கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
பிரதமரின் பயணத்துக்கு முன்பாக 6 – 7 ஆகிய தேதிகளில் பாட்னா வரும் பிரதமரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகத் தெரிகிறது. முன்கூட்டியே கண்டுபிடித்ததால் பிரதமர் மோடியைக் கொல்லும் சதித் திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம். இந்த சதித்திட்டத்தில் கேரளா, மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், தங்கள் அடையாளத்தை மறைத்து விடுதிகளில் தங்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட கைதிகளுக்குத் துருக்கியிலிருந்து நிதியுதவி செய்யப்பட்டிருப்பதும், அக்தர் பர்வேஸின் வங்கிக் கணக்கில் ரூ. 80 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களில் சோதனை செய்ததில் துண்டுப்பிரசுரங்கள் கிடைத்துள்ளன. அதில், 2047-ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கருத்துகள் இருந்தது. முகமது நபிகள் நாயகம் குறித்த நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவு அளித்தவர்களைக் கொலை செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர். இந்த தீவிரவாத குழுவில் 26 பேர் உள்ளனர். அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாகத் தேசிய புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழுவோடு தொடர்புடைய உள்ளூர், வெளி மாநில இளைஞர்களை என்ஐஏ அதிகாரிகள் தேடி வருகின்றனர். இதற்கிடையில், தீவிரவாதிகள் எங்கள் அமைப்பின் உறுப்பினர்களாக இல்லை. அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மறுத்துள்ளது.