பாட்னா: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அலுவலகங்களில் பிஹார் போலீஸார் நேற்று அதிரடி சோதனையை நடத்தினர். இதுதொடர்பாக போலீஸார் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிஹார் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவரைக் கொல்ல சதி செய்ததாக பாட்னாவைச் சேர்ந்த அத்தர் பர்வேஸ், முஹம்மத் ஜலாலுதீன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தீவிரவாத அமைப்புகளுக்கும் இதில் தொடர்புள்ளதாக பிஹார் போலீஸ் தெரிவித்திருப்பதால், இந்த வழக்கு குறித்து தேசிய விசாரணை முகமையும் (என்ஐஏ) தற்போ து விசாரித்து வருகிறது.
மேலும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ, தடை செய்யப்பட்டுள்ள சிமி அமைப்பு ஆகியவற்றின் பிரச்சார ஆவணங்கள் அத்தர், ஜலாலுதீன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆவணத்தில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் என்றும், அதற்காக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அச்சிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போலீஸார் நேற்று பாட்னா உட்பட பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அங்கிருந்த பல்வேறு ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மேலும், சோதனையின் முடிவில் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றுமுன்தினம் இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.