முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூலை16) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை. கேரளத்தில் பாதிப்பு ஏற்பட்டதும் தமிழகத்திலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
யாரும் பயம்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை கண்டறிய இந்தியா முழுக்க 15 ஆய்வு மையங்கள் ஏற்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
அதில் ஒரு ஆய்வு மையம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளோம். அந்த வகையில் ஒரு ஆய்வு மையம் அமையும் என நம்புகிறோம். இதனை ஒன்றிய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.
தொடர்ந்து, கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார். மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சை பெற்றுவருகிறார்” என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ஜூலை 12ஆம் தேதி கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வியாழக்கிழமை (ஜூலை14) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், காவேரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மு.க. ஸ்டாலினுக்கு கரோனா தொற்று குணமடைந்துவருகிறது. அவருக்கு சில நாள்கள் மருத்துவ ஓய்வு தேவைப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.