சென்னை: மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்த போக்குவரத்து காவல் துறை சார்பில் சென்னையில் நாளை முதல் ஒரு வருடத்துக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சென்னை போக்குவரத்து காவல் துறை, சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக சென்னை மாநகரம் முழுவதும் 8 இடங்களில், ஒரு வருட நிகழ்ச்சியாக “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ்” என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து அண்ணாநகர் 2-வது அவென்யூ, ராஜீவ்காந்தி சாலை (ஓஎம்ஆர்), காந்தி நகர் 4-வது பிரதான சாலை (அடையாறு), காதர் நவாஸ் கான் சாலை (நுங்கம்பாக்கம்), லஸ் சர்ச் சாலை (மயிலாப்பூர்), ஆர்ம்ஸ் சாலை (கீழ்ப்பாக்கம்), லட்சுமணன் சாமி சாலை (கே.கே.நகர்) காமராஜர் சாலை (மெரினா) ஆகிய 8 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு சாலையிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி வரை சுமார் 800 முதல் 1000 மீட்டர் வரையிலான சாலையில் 5 வாரங்களுக்கு “ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த சாலைகளில் 3 மணி நேரத்துக்கு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு ஹாப்பி ஸ்ட்ரீட்ஸ் – நோக்கங்கள் தொடர்பான நடனம், பாட்டு, இசை நிகழ்ச்சிகள், இலவச வாடகை சைக்கிள் ரெய்டு, ஸ்கேட்டிங், சாக் ரேஸ், கயிறு இழுத்தல், கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், டார்ட் போர்டு போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் முக ஓவியம், நெயில் ஆர்ட் மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அதுமட்டுமின்றி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. முதல் நிகழ்ச்சியை நாளை காலை 6 மணிக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்ணாநகரில் தொடங்கி வைக்க உள்ளார். இதில், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் உட்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.