வியப்பில் ஆழ்த்தும் புதுக்கோட்டை தொல்லியல், நாணயவியல் கண்காட்சி!

புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொல்லியல் கழக கருத்தரங்கம் மற்றும் ஆவண வெளியீட்டு விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொல்லியல் கழக கருத்தரங்கில் தனி அரங்கம் ஒன்றில் தொல்லியல் மற்றும் நாணயவியல் கண்காட்சியும் அதே போல் நெல் ஜெயராமன் குடும்பத்தினர் சார்பில் பாரம்பரிய நெல் ரகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தொல்லியல் கண்காட்சியை தொல்லியல் கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் துறயூரைச் சேர்ந்த பெரியசாமி ஆறுமுகம் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக சேமித்து வைத்த பழமையான பொருட்களை காட்சிப்படுத்தி நமது தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றியுள்ளார்.
image
இந்த தொல்லியல் கண்காட்சியில் கல் மணிகள், கண்ணாடி வளையல்கள், சங்க கால சங்கு வளையல்கள், ஓலைச் சுவடிகள், கருப்பு சிவப்பு பானைகள், வெளி மாநில பானை ஓடுகள், இரும்பு உருக்கப் பயன்படுத்திய மண் குழாய்கள், மாவுக்கள், சுடுமண் காதணிகள், அரண்மனை கூரை ஓடுகள், சுடுமண் புகைப்பான்கள், முதுமக்கள் தாழி ஓட்டின் குறியீடு, சுடுமண் பொம்மைகள், புதிய பழைய கற்கால கல் ஆயுதங்கள், கல் மரம், கடல் படிமங்கள், முரசு, எடைக்கல், வேட்டை தடி, பழங்கால நாணயங்கள், சேர சோழ பாண்டியர்களின் தங்க நாணயங்கள், பீரங்கி குண்டுகள், கோட்டை செங்கல்கள் உள்ளிட்ட மனிதர்கள் தோன்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் மனிதர்கள் தோன்றிய பிறகு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
image
இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்துள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட்டு சென்று வரக்கூடிய நிலையில் அருங்காட்சியகத்தில் கூட இல்லாத பொருட்கள் இந்த தொல்லியல் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் பழமை வாய்ந்த இந்த பொருட்களை எல்லாம் பார்க்கும் பொழுது வியப்பை ஏற்படுத்துவதாகவும் தொல்லியல் சார்ந்த ஆர்வம் பலரிடம் இல்லாத நிலையில் தற்பொழுது அந்த ஆர்வம் அனைவரிடத்திலும் வந்துள்ளதாகவும் இந்த கண்காட்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கண்காட்சியை பார்வையிட வந்தவர்கள் தெரிவித்தனர்.
image
மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த கண்காட்சியை பார்வையிட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், நாளை வரை நடைபெற உள்ள தொல்லியல் கருத்தரங்கில் இடம்பெற்றுள்ள தொல்லியல் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிடுவார்கள் என தொல்லியல் கழகத்தினர் தெரிவித்தனர். இந்த கருத்தரங்கில் புதுக்கோட்டையை சேர்ந்த பசீர் என்பவர் நாணயவியல் கண்காட்சியை அமைத்துள்ளார். இதில் நாம் பயன்படுத்திய பழைய காசுகள், ரூபாய் நோட்டுகள், அனைத்து நாடுகளிலும் உள்ள ரூபாய்கள், அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பாரம்பரிய நெல் ரகங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் குடும்பத்தினரின் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.