இந்தியாவில் நாளுக்கு நாள் ஐபிஓக்களில் முதலீடு செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
மற்ற முதலீடுகளை விட ஐபிஓக்களில் முதலீடு செய்வதில் அதிக லாபம் மற்றும் பாதுகாப்பு தன்மை இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு சில பெரிய நிறுவனங்களின் ஐபிஓக்கள் வெளிவரவுள்ளதை அடுத்து மக்கள் அதனை வாங்க ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்ஐசி முதல் அதானி வில்மர் வரை
எல்ஐசி முதல் டெல்லிவரி மற்றும் அதானி வில்மர் வரை, 2022ஆம் ஆண்டு பல ஐபிஓக்கள் பட்டியலிடப்பட்டதை பார்த்தோம். சில ஐபிஓக்கள் ஓரளவு லாபத்தையும் சில ஐபிஓக்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மெகா எல்ஐசி ஐபிஓ மிகப்பெரிய அளவில் முதலீட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ஏமாற்றியது.
புதிய ஐபிஓக்கள்
இந்த நிலையில் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பல அற்புதமான ஐபிஓக்கள் வரிசையாக பட்டியலிட இருப்பதால் முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எனவே நீங்கள் புதிதாக ஐபிஓக்களில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், சில நிறுவனங்களின் பட்டியல் இதோ.
1. மாமேர்த்
ஐபிஓவிற்கான திட்டங்களை சமீபத்தில் மாமேர்த் அறிவித்தது என்பது தெரிந்ததே. இந்திய ஸ்கின்கேர் ஸ்டார்ட்அப் மற்றும் யூனிகார்ன் நிறுவனமான மாமேர்த் அடுத்த ஆண்டு $3 பில்லியன் ஐபிஓவை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபிஓ பட்டியலிட வரைவு ஒழுங்குமுறை ஆவணங்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2. ஃபிளிப்கார்ட்
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் தனது ஐபிஓ மதிப்பீட்டு இலக்கை முந்தைய இலக்கான $50 பில்லியனில் இருந்து $60 முதல் $70 பில்லியனாக உயர்த்தியதாக செய்திகள் வெளியானது. இந்த ஆண்டு வெளியாகும் மிகப்பெரிய, மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஐபிஓ ஃபிளிப்கார்ட் ஆக இருக்கும் என கருதப்படுகிறது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ஐபிஓ 2023ஆம் ஆண்டின் முற்பகுதியில் பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
3. ஸ்விக்கி
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் $10 பில்லியன் மதிப்பை தாண்டிய இந்திய உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐபிஓ மூலம் குறைந்தது $800 மில்லியன் திரட்டுவதற்கான திட்டத்தில் உள்ளது என்று Nikkei Asia சமீபத்தில் தெரிவித்தது. இதற்காக ஸ்விக்கி நிர்வாகம் இயக்குனர்களை நியமனம் செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
4. ஓயோ
2013ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் விருந்தோம்பல் துறையின் முக்கிய நிறுவனமாக ஓயோ உள்ளது. ஓயோ நிறுவனத்தின் ஐபிஓ இந்த ஆண்டு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்ததாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஐபிஓ மூலம் இந்நிறுவனம் சுமார் ரூ.8,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
5. ஓலா கேப்ஸ்
2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஐபிஓ பட்டியலிட ஓலா நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாதியில் திரட்ட முடிவு செய்துள்ளது. ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘நாங்கள் உண்மையில் இந்த ஆண்டு முதல் பாதியில் ஐபிஓ பட்டியலிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் தற்போது இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பட்டியலிடலாம் என திட்டத்தை மாற்றியுள்ளோம். ஐபிஓ பட்டியலிட எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. நாங்கள் ஐபிஓ சந்தைக்கு வரும்போது முதலீட்டாளர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
6. பைஜூஸ்
பெங்களூரை தளமாகக் கொண்ட பைஜூஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் சுமார் $22 பில்லியன் திரட்ட திட்டமிட்டுள்ளது. அடுத்த 9 முதல் 12 மாதங்களில் ஐபிஓ மற்றும் பட்டியலுக்கான ஆவணங்களை பைஜூஸ் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Swiggy To Flipkart: Looking forward upcoming Big IPOs in this year!
Swiggy To Flipkart: Looking forward upcoming Big IPOs in this year! | ஸ்விக்கி முதல் ஃபிளிப்கார்ட் வரை: வரவிருக்கும் பெரிய ஐபிஓக்கள் என்னென்ன தெரியுமா?