30% ரசிகர்கள் மட்டுமே வந்து செல்வதால் ஆந்திராவில் 400 தியேட்டர்கள் மூடல்: உரிமையாளர்கள் அதிரடி முடிவு

திருமலை: ஆந்திராவில் தியேட்டர்களுக்கு 30 சதவீத ரசிகர்கள் மட்டுமே வந்து செல்வதால், உடனடி யாக 400 தியேட்டர்களை அதன் உரிமையாளர்கள்  மூடிவிட்டனர். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து என்று, நகரவாரியாக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலையைக் குறைத்தது. பிறகு அதை ஏ, பி, சி என்று தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்தது. இதனால் வசூல் தொகை பெருமளவில் குறைந்ததால், தியேட்டர்களை தொடர்ந்து இயக்க முடியவில்லை என்று உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் நடிகர்கள் முதல்வர் ஜெகன் மோகனை நேரில் சந்தித்து, டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உடனே சினிமா தியேட்டர் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக ஆந்திராவில் முன்னணி நடிகர்கள் நடித்த பிரமாண்டமான படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு ரசிகர்கள் சினிமா தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். மேலும், ஓடிடி தளங்களில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாவதால், ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து படம் பார்ப்பதை விரும்புவது மட்டுமின்றி, சினிமாவுக்காக செலவிடும் தொகையையும் குறைத்துக் கொண்டுள்ளனர். இதனால், 30 சதவீதம் ரசிகர்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்துவிட்டு செல்கின்றனர்.இதன் காரணமாக தியேட்டர்களுக்கு ஒரு காட்சிக்கு ரூ.2,000 முதல் 3,000 வரை மட்டுமே வசூலாகிறது. இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சினிமா தியேட்டர்களை சரியாகப் பராமரிக்க முடியவில்லை. மின்சார கட்டணம் செலுத்த முடியவில்லை. சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து நஷ்டத்திலேயே இயங்குவதாக கூறி, நேற்று முதல் ஆந்திராவில் 400 சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தசரா பண்டிகையின் போது பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகிறது. எனவே, அப்போது ஓரளவுக்கு வசூலாகும் என்பதால், அதுவரையில் தியேட்டர்களை மூடி வைக்க அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.