‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’, ‘எண்டு கேம்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர்கள் ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘The Gray Man’. ஆக்ஷன் – திரில்லர் ஜானரில் தயாராகியிருக்கும் இப்படத்தில், தனுஷ் ‘அவிக் சான்’ (Avik San) என்னும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அமெரிக்காவில் ஜூலை 15 அன்று சில திரையரங்குகளில் மட்டும் வெளியாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து 22-ம் தேதி, உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் வெளியீட்டையொட்டி நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் தனுஷ், ஹாலிவுட்டில் பணியாற்றிய அனுபவங்கள், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள், தான் நடிக்கும் ‘அவிக் சான்’ கதாபாத்திரம் எப்படிப்பட்டது என ஏராளமான விஷயங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டிருந்தார்.
அதேபோல, ‘தி கிரே மேன்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கேப்டன் அமெரிக்கா’ புகழ் கிறிஸ் எவன்ஸ் மற்றும் நடிகை ஆனா டி ஆர்ம்ஸ் ஆகியோர் இணைய நேர்காணல் ஒன்றில் தனுஷ் குறித்துச் சிலாகித்துப் பேசியுள்ளனர்.
“தனுஷும் நானும் சண்டைக் காட்சிகளுக்கான பயிற்சி முகாமில் பல மணிநேரங்களைச் செலவழித்திருக்கிறோம். அவர் மிகவும் பொறுமைசாலி. கடின உழைப்பாளி. பல வாரங்கள் பயிற்சிக்காக மெனக்கெட்டிருக்கிறார். அப்போதெல்லாம் அவரிடம் இருந்து எந்தவொரு அதிருப்தியும் வெளிப்படவில்லை” என்று ஆனா டி ஆர்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
‘கேப்டன் அமெரிக்கா’ கிறிஸ் எவன்ஸ் பேசுகையில், “தனுஷ் தன் வேலைக்கு முக்கியத்துவம் அளிப்பவர். கம்பீரமானவர். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
இக்கதை மார்க் கிரீனியின் ‘The Gray Man’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. புதன்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ‘The Gray Man’ பிரீமியர் ஷோவில் தனுஷ் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ராவுடன் கலந்து கொண்டார். இது குறித்து மார்க் கிரேனி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் தனுஷிடம் தன்னை நேரில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் படத்தின் பிரீமியர் ஷோவில் அவரைப் பார்த்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
“தனுஷ் அவரது மகன்களுடன் சிவப்புக் கம்பளத்தில் இருப்பது என்னைப் பிரமிக்க வைக்கிறது. நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் கூட அவரைப் பார்த்தது உற்சாகமளிக்கிறது. இவரைப் பற்றித் தெரியாமல் யாரேனும் இருந்தால், விரைவில் தெரிந்து கொள்வீர்கள்” என்று மார்க் கிரேனி தெரிவித்திருக்கிறார்.