லக்னோ: இலவச திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் புந்தேல் கண்ட் பகுதியில் ரூ.14,850 கோடியில் 296 கி.மீ. தொலைவுக்கு 4 வழி விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. சித்திரகூட் மாவட்டம் பரத்கூப்பில் தொடங்கி எட்டாவா மாவட்டம் குட்ரெயில் வரை 7 மாவட்டங்களை இந்த சாலை கடந்து செல்கிறது.
புந்தேல்கண்ட் விரைவு சாலை என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ஜலான் மாவட்டம், கைத்தேரி கிராமத்தில் நடந்த தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
முந்தைய ஆட்சிக் காலத்தில் உத்தர பிரதேசத்தில் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. சரேயு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற 40 ஆண்டுகள் ஆனது. அர்ஜுன் அணை திட்டத்தை நிறைவேற்ற 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. கோரக்பூர் உரத் தொழிற்சாலை சுமார் 30 ஆண்டுகள் மூடப்பட்டிருந்தது.
பயண நேரம் குறையும்
பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நலத்திட்டங்கள் வேகம் பெற்றன. புந்தேல்கண்ட் விரைவு சாலை 28 மாதங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விரைவு சாலையின் மூலம் டெல்லி-சித்திரகூட் பயணம் 4 மணி நேரம் வரை குறையும். புதிய சாலையால் புந்தேல்கண்ட் பகுதியில் தொழில் வளம் பெருகும்.
ஒரு காலத்தில் டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது குக்கிராமங்கள் வரை வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகரங்கள், கிராமங்கள் சரிசமமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன.
தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. இதுகுறித்து மக்களும் இளைஞர்களும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும். இந்த இலவச கலாச்சாரத்தால் புதிய விரைவு சாலைகள், புதிய விமான நிலையங்களை உருவாக்க முடியாது.
இலவச திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என்று சிலர் கருதுகின்றனர். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும்.
குறுக்கு வழியை பின்பற்றவில்லை
இலவச திட்டங்கள் என்ற குறுக்கு வழியை பாஜக பின்பற்றவில்லை. மத்தியில் ஆளும் பாஜக அரசு இலவச திட்டங்களை தவிர்த்து நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்துகிறது. புதிய சாலைகளை அமைப்பதன் மூலமும் , புதிய ரயில் பாதைகளை உருவாக்குவதன் மூலமும் மக்களின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் அயராது பாடுபடுகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.