புதுடெல்லி: லக்னோவில் ரூ.2,000 கோடி மதிப்பில் கடந்த 10-ம் தேதி லூலூ மால் திறக்கப்பட்டது. இதை முதல்வர் ஆதித்யநாத் திறந்து வைத்தார். சுமார் 22 லட்சம் சதுர அடிகளில் நகரின் மிகப்பெரிய மாலான இதில், கடந்த 12-ம் தேதி 10 பேர் கொண்ட முஸ்லிம் குழு தொழுகை நடத்தியது.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு இந்துத்துவாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து மாலில் மதச்சார்பு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை என்று அதன் நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்தது. லூலூ மால் சார்பில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது லக்னோ காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இளைஞர்கள் 2 பேர் லூலூ மாலில் சுந்தரகாண்டம் படிக்க வந்ததாக கூறியுள்ளனர். அவர்களை மாலின் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதேசமயம், மீண்டும் முஸ்லிம் இளைஞர்கள் 3 பேர் அந்த நாளில் லூலூ மாலில் தொழுகை நடத்தும் பதிவு வெளியானது. இதனால், மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த இந்துத்துவாவினர் நேற்று லூலூ மாலை முற்றுகையிட்டனர். இதில், பஜ்ரங் தளம், கர்ணி சேனா, இந்து சமாஜ் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் இடம் பெற்றிருந்தனர்.
பாதுகாப்பை மீறி மாலில் நுழைய முயன்ற இந்துத்துவாவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு அனைவரையும் பேருந்துகளில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதற்கிடையில், லூலூமாலில் தொழுகை நடத்தியவர்களில் 4 பேரை லக்னோ போலீஸார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
இதனிடையே, லக்னோ ரயில் நிலையத்தில் சில முஸ்லிம் பயணிகள் தொழுகை நடத்தி உள்ளனர். இதை கண்டித்து இந்துசமாஜ் கட்சி சார்பில் ரயில் நிலையத்தில் சுந்தர காண்டம் ஒப்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக இந்து சமாஜின் தலைவர் கிரண் திவாரியை அவரது வீட்டிலேயே போலீஸார் சிறைபடுத்தினர்.
ரயில் பயணத்துக்காக வரும் முஸ்லிம்கள் ரயில் நிலையங்கள் மட்டுமின்றி ஓடும் ரயில்களிலும் தொழுகை நடத்துவது வழக்கம். இதற்கு மற்ற மதத்தினர் பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிப்பதில்லை. எனினும், கடந்த ஆண்டு ஹரியாணாவின் குருகிராமில் பொது இடங்களில் தொழுகை நடத்த முதல் முறையாக எதிர்ப்புகள் கிளம்பின. இதை தொடர்ந்து தொழுகைக்கான எதிர்ப்புகள் பாஜக ஆளும் உ.பி.யிலும் தொடங்கி வலுத்து வருகிறது.