எதிர்வரும் புதன்கிழமை புதிய ஜனாதிபதி தெரிவு

பாராளுமன்ற கட்சித் தலைவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்படவுள்ளார்.

வாக்கெடுப்பு எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்புமனுவை பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ள இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது பற்றிய இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்சிரஸ் அறிவித்துள்ளது.

எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிப்பதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாஹர காரியவசம் அறிவித்திருந்தாலும் கட்சியின் யாப்பிற்கு அமைய அவ்வாறான தீர்மானத்தை அவருக்கு அறிவிக்க முடியாது என கட்சியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பு தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் அனுர குமார திசாநாயக்க போட்டியிடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் சட்ட விதிகளுக்கு அமைவாக எந்தவொரு தடையுமின்றி இந்த நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.