இடாநகர்: அசாம் – அருணாச்சல் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவுகிறது. இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு ஆகிய இருவரும் கடந்த ஜனவரி 24-ம் தேதியும் ஏப்ரல் 20-ம் தேதியும் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில் இரு மாநில முதல்வர்களும் அருணாச்சலில் உள்ள நாம்சாய் நகரில் நேற்று முன்தினம் சந்தித்தனர். அப்போது இரு மாநிலங்களுக்கு இடையிலான பல ஆண்டு கால எல்லைப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கான உடன்பாட்டில் அவர்கள் கையெழுத்திட்டனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தனது ட்விட்டர் பதிவில், “தற்போதைய எல்லை அடிப்படையில் தகராறுக்கு உட்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையை 123-க்கு பதிலாக 86 ஆக குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். மீதமுள்ளவற்றை செப்டம்பர் 2022-க்குள் தீர்க்க முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார்.
அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு தனது ட்விட்டர் பதிவில், “இரு மாநில அரசுகளும் தலா 12 பிராந்திய குழுக்களை அமைத்து பிரச்சினைக்குரிய கிராமங்களை கூட்டாக சரிபார்த்து அந்தந்த மாநில அரசுகளுக்கு பரிந்துரை அளிக்கும்” என்று கூறியுள்ளார்.
அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு மற்றொரு பதிவில், “இரு மாநில எல்லைத்தகராறு 70 ஆண்டுகள் பழமையானது. துரதிருஷ்டவசமாக இதற்கு முந்தைய எந்த அரசும் அதைத் தீர்க்கவில்லை’’ என்று கூறியுள்ளார்.