சென்னையில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி போலி வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமங்கலத்தில் செயல்பட்டு வந்த CMS நிறுவனம் கப்பலில் வேலைக்கு செல்வதற்கான பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி அதன் மூலம் ஏராளமான நபர்களிடம் மோசடி செய்துள்ளதாக சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கேரளாவை சேர்ந்த பினுகுமரன் நாயர் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் சி எம் எஸ் நிறுவனம் மூலமாக கப்பலில் வேலைக்கு சேர்வதற்கான தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும் எனக்கூறி, ஒருவருக்கு தலா மூன்று லட்ச ரூபாய் என பணத்தை வசூல் செய்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்காமல் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.