கள்ளக்குறிச்சி:
போராட்டம் நடைபெறும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் மறுநாள் பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும் என்று கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து விட்டனர்.
கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர்.
கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளாதகவும் அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவி இறப்பு தொடர்பாக உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.