கியூட் தேர்வை எழுத மறுவாய்ப்பு இல்லை: யுஜிசி திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: ‘கியூட் பொது நுழைவுத் தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மறு வாய்ப்பு  வழங்க முடியாது,’ என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 45 ஒன்றிய பல்கலைக் கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான முதல் கட்ட ‘கியூட்’ கட்ட பொது நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்வில் கடைசி நேரத்தில் சில தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதால், மாணவர்கள் பலர் தேர்வு எழுத முடியாமல் தவற விட்டனர். தேர்வை தவறவிட்ட இந்த மாணவர்களுக்கு, ஆகஸ்ட்டில் நடக்கும் 2ம் கட்ட தேர்வின்போது மறுவாய்ப்பு வழங்கப்படும் நேற்று முன்தினம் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகின.இது குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கியூட் தேர்வு மையங்களுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே செல்ல வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், 30 நிமிடங்கள் கூடுதல் நேரமும் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதுபோன்ற சூழலில், தேர்வு மையங்கள் மாற்றத்தால் தேர்வை தவற விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்தவித முகாந்திரமும் கிடையாது. அதனால், தேர்வை தவற விட்டவர்களுக்கு மறு வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படாது,’ என தெரிவித்துள்ளார். இதனால், முதல் கட்ட தேர்வை தவற விட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.