புதுச்சேரி: குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை முழு பாதுகாப்பில் உள்ளது, வாக்குப்பதிவுக்கு பிறகு வாக்குப் பெட்டி டெல்லி எடுத்துச் செல்லப்பட உள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி முழு பாதுகாப்பில் சட்டப்பேரவையுள்ளது. அலுவலகங்கள் அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளோர் மட்டுமே நாளை அனுமதிக்கப்படுவர். நாளை வாக்குப்பதிவு முடிந்த பிறகு டெல்லிக்கு பாதுகாப்புடன் வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லப்படும். இத்தேர்தலில் நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்க அனுமதியில்லை.
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (ஜூலை 18ம் தேதி) நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் களம் இறங்கியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அனைத்து மாநிலத்திலும் நடந்து வருகிறது. புதுச்சேரியில் சட்டப்பேரவை வளாகத்தில் நாலாவது மாடியிலுள்ள கருத்தரங்க அறையில் தேர்தல் நடக்கிறது. நாளை (18ம் தேதி ) காலை 10 முதல் மாலை 5 வரை தேர்தல் நடக்கும்.
சட்டசபை செயலர் அறைக்கு பக்கத்தில் உள்ள அறை ஓட்டுப் பெட்டி வைப்பதற்கான ஸ்ட்ராங் ரூம் ஆக மாற்றப்பட்டுள்ளது. அந்த அறையின் ஜன்னல் முழுவதுமாக அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது 24 மணி நேரமும் காவல் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 30 நியமன எம்எல்ஏக்கள் 3 என மொத்தம் 33 எம்எல்ஏக்கள் இரண்டு எம்.பிக்கள் உள்ளனர். இத் தேர்தலில் 3 நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. எனவே 30 எம்எல்ஏக்கள் இரண்டு எம்.பிக்கள் ஓட்டுபோட வசதியாக சட்டசபையில் நான்காவது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் வாக்குச் சீட்டு மூலம் ஓட்டுப்பதிவு நடத்தை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
டெல்லிக்கு சென்று வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு, வாக்களிக்க பிரத்யேக பேனா வாங்கி பத்திரமாக பாதுகாப்பு அறையில் வைத்துள்ளனர். வாக்களிப்பானது ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடக்கும். அன்றைய தினம் வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு அன்றைய தினமே விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை டெல்லியில் நடக்கும். வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் அடையாள அட்டையுடன் வரும் எம்எம்ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள், அனுமதி சீட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் மட்டுமே பேரவை வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவார்கள். அதனால் பேரவையில் உள்ள அனைத்து அலுவலகங்களும் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
வாக்குகள் எத்தனை… பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு புதுச்சேரி ஆளுங்கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு பலமாக உள்ளது. ஆளுங்கட்சிக்கு என்ஆர் காங்கிரஸ் 10, பாஜக 6,ஆதரவு சுயேச்சைகள் 4 என 20 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இது மட்டும் இன்றி பாஜகவை சேர்ந்த செல்வகணபதி ராஜ்யசபா எம்.பி ஆக உள்ளார். எனவே 20 எம்எல்ஏக்கள் மூலம் 320 வாக்குகளும் ஒரு எம்பி மூலம் 700 ஓட்டுகள் என மொத்தம் 1020 ஓட்டுகள் திரௌபதி முர்முவுக்கு சுலபமாக கிடைக்கும்.
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சிங்காவுக்கு திமுக 6 காங்கிரஸ் 2 என 8 எம்எல்ஏக்கள், மக்களழை எம்.பி வைத்திலிங்கம் ஆதரவு உள்ளது. எனவே அவருக்கு 8 எம்எல்ஏக்கள் மூலம் 128 ஓட்டுகளும் ஒரு எம்.பிக்கள் மூலம் 700 ஓட்டுகளும் என மொத்தம் 828 வாக்குகள் கிடைக்கும்.
இது தவிர இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் நடுநிலையாக உள்ளனர். இவர்களிடம் 32 வாக்குகள் உள்ளன. புதுச்சேரி எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பு எவ்வளவு ஒவ்வொரு மாநிலத்திலும் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை எண்ணிக்கையை தற்போது உள்ள சட்டசபை தொகுதிகளில் எண்ணிக்கையை வைத்து வகுத்தால் என்ன தீர்வு கிடைக்குமோ அதுதான் ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு ஆகும்.
இதன்படி புதுச்சேரியில் ஒரு எம்எல்ஏவின் ஓட்டு மதிப்பு 16 ஆகும் 30 எம்எல்ஏக்களை கணக்கிடும்போது 450 ஓட்டுகள் புதுச்சேரியில் உள்ளன. ஒரு எம்.பி யின் ஓட்டு மதிப்பு 700 ஆக உள்ளது புதுச்சேரியில் 2 எம்பிக்கள் உள்ளனர் எனவே இங்கு எம்.பி களின் ஓட்டு மதிப்பு மொத்தம் 1400 ஆகும். இரண்டு எம்.பிகள்,30 எம் எல் ஏக்கள் சேர்த்து கணக்கிட்டால் ஜனாதிபதி தேர்தலில் புதுச்சேரியில் மொத்த ஓட்டு மதிப்பு 1880 ஆக உள்ளது.