டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா மத்திய அமைச்சராகவும், ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். இத்தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தன்கர் போட்டியிடும் நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவராவார். இவரது சொந்த ஊர் கர்நாடகா மாநிலம் மங்களூரு. கோவா, ராஜஸ்தான், குஜராத், உத்தர்காண்ட் மாநில ஆளுநராக இருந்திருக்கிறார். நாடாளுமன்ற விவகாரத் துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகங்களில் அமைச்சராக இருந்திருக்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆளும் பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். ஜூலை18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிது. இதனைத் தொடர்ந்து துணை குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க ஆளுநராக இருக்கும் ஜெகதீப் தங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.