கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவியின் மரணம் குறித்த விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். வன்முறை ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் நீதி கேட்டு கடந்த 5 நாட்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது.
கல்வீச்சில் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட காவலர்கள் காயம் அடைந்தனர். தனியார் பள்ளிக்குள் நுழைந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளையும் சேதப்படுத்தினர். ஒரு கட்டத்தில் வானத்தை நோக்கி காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரக்காரர்களை எச்சரித்தனர். வன்முறை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் சூழல் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன். (2/2)
— M.K.Stalin (@mkstalin) July 17, 2022
மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும், உள்துறை செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்கு செல்ல உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்து பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM