திருவனந்தபுரம்: கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் கனமழைக்கு 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். தொடர்ந்து பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 14 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் நீடிக்கும். இந்த வருடம் 3 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கியது. ஆனால் ஜூன் மாதத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. கேரளாவை பொறுத்தவரை ஜூன் 1 முதல் 30 வரை 30.86 செமீ மழை மட்டுமே பெய்தது. இது வழக்கமாக பெய்யும் மழையை விட 52 சதவீதம் குறைவாகும். இந்த நிலையில் ஜூலை மாதத்தில் கடந்த சில வாரங்களாக பருவமழை தீவிரமடைந்து உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா ஆகிய தென்மாவட்டங்கள் தவிர ஏனைய பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு, கண்ணூர் ஆகிய வட மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை பெய்கிறது. ஆகவே இந்த மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. நேற்று காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காசர்கோட்டில் ஷான் ஆரோன் (13) என்ற சிறுவன் மரம் விழுந்தும், கோழிக்கோட்டில் முஹம்மது இர்ஷாத் (12) என்ற சிறுவன் குளத்தில் மூழ்கியும் உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கேரளாவில் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மலம்புழா உள்பட 14 அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து ஆறுகளின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கனமழை மேலும் 4 நாட்கள் நீடிக்கும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.