புதுடெல்லி: நாடு முழுவதும் மக்களுக்கு 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சாதனையை ஒன்றிய அரசு நெருங்கி வருகிறது. சீனாவில் 2019ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி, ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த தொற்றால் உலகளவில் நேற்றைய நிலவரப்படி 56.1 கோடி பேர் பாதித்துள்ளனர். 63.1 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இதில், 8.93 கோடி பாதிப்புகள், 10.2. லட்சம் பலியுடன் உலகளவில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி 4.37 கோடி பேர் பாதித்துள்ளனர். 4.37 லட்சம் பேர் இறந்துள்ளனர்.கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இலவசமாக தடுப்பூசி போடும் பணியை கடந்தாண்டு ஜனவரி 16ம் தேதி ஒன்றிய அரசு தொடங்கியது. தற்போது, 2 டோஸ் தடுப்பூசியுடன், முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. அடுத்த 75 நாட்களுக்கு இது செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் வரையில் 199 கோடியே 87 லட்சம் டோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு இருந்தது. இது, தற்போது 200 கோடி டோஸ் என்ற சாதனையை எட்டியுள்ளது.