சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
சிங்கப்பூர் நாட்டில் இம்மாத இறுதியில், உலக நகரங்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வரும்படி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்து இருந்தார்.
இதைத் தொடர்ந்து, உலக நகரங்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கப்பூர் நாட்டிற்கு செல்ல அனுமதிக் கோரி மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த அனுமதியும் வரவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டிற்கு செல்ல அனுமதி அளிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், “இந்த மாத இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற உள்ள உலக நகரங்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வளவு முக்கியமான மேடைக்கு முதல்வர் வருவதைத் தடுப்பது நாட்டின் நலனுக்கு எதிரானது. இந்த அழைப்பு நாட்டிற்கு பெருமையும், கவுரவமும் ஆகும்” குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து, இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் ஆம் ஆத்மி கட்சி பேசி உள்ளது. டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவின் அலுவலகத்தில் இந்த விவகாரம் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.