சென்னை: தமிழக முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழக உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் சின்னசேலம் விரைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மாணவியின் உடலை வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர், இந்த சாலை மறியல் போராட்டம், வன்முறையாக மாறியது. மாணவி படித்து வந்த தனியார் பள்ளிக்குள் நுழைந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், தனியார் பள்ளி பேருந்துகள், வகுப்புறைகள், கணினிகள், கண்ணாடி ஜன்னல்கள், கணினி உள்ளிட்ட கருவிகள், மேஜைகள், இருக்கைகள், பள்ளியிலிருந்து ஆவணங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி, தீக்கிரையாக்கினர். இதனால், அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் முயன்றபோது, ஏற்பட்ட பிரச்சினையில், போராட்டக்காரர்கள், காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பொதுமக்கள் என 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீஸார், தடியடி நடத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஏற்கெனவே 350-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கூடுதலாக 500 காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், கலவர பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதல்வர் உத்தரவு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்” என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு, தமிழக உள்துறை செயலர் பனீந்திர ரெட்டி, காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் விரைந்துள்ளனர்.