சென்னை: சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்ற பின்னர், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுகவின் 63 எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.ஓபிஎஸ் ஆதரவாளர்களாக செயல்பட்டு வரும் 3 எம்எல்ஏக்கள் மட்டும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வழக்கமாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
ஆனால், கடந்த ஜூலை 11-ம் தேதி ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக அந்த அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் கூட்டம் அடையாறில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்து வருகிறது.
நாளை நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு அதிமுக தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. பாஜக சார்பில் முகவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர், வாக்களிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கின்றனர்.
மேலும், அதிமுக எதிர்கட்சித் துணைத் தலைவராக இருந்துவரும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்டு, அதன் அடிப்பைடயில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் அல்லது நத்தம் விஸ்வநாதன் ஆகிய மூவரில் யாராவது ஒருவர் அந்த பதவிக்கு கொண்டுவரப்படலாம் என்று கூறப்படுகிறது. எதிர்கட்சி துணை செயலாளராக இருக்கக்கூடிய மனோஜ் பாண்டியனை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.