உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் ஆன்லைன் பணப் பரிவர்த்தனையில் ரூபாய் 40 ஆயிரத்தை இழந்தார். இது குறித்து அந்த மாணவர் தன் நண்பர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த இழப்பை ஈடுகட்ட எதாவது ஒரு குழந்தையைக் கடத்தி அதன் பெற்றோரிடம் மிரட்டிப் பணம் பறிப்பது என்று அனைவரும் சேர்ந்து முடிவு செய்தனர். இதையடுத்து, தான் படிக்கும் பள்ளியிலிருந்து ஒரு மாணவனைக் கடத்த முடிவு செய்து பணத்தை இழந்த மாணவன் பள்ளிக்கு நேரத்திலேயே சென்றான். பணத்தை இழந்த 16 வயது மாணவனின் வகுப்புக்கு வெளியில் 7 வயது மாணவன் விளையாடிக்கொண்டிருந்தான். உடனே 7 வயது மாணவனை 16 வயது மாணவன் தன்னுடன் அழைத்துச் சென்றான். பின்னர் தன் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து, அந்த மாணவனை இருசக்கர வாகனம் ஒன்றில் அலிகர் அழைத்துச் சென்றான். அவனைப் பின்தொடர்ந்து அவனுடைய நண்பர்கள் 3 பேர் பஸ் மூலம் அலிகர் வந்து சேர்ந்தனர்.
அவர்களில் ஒருவனுக்கு அலிகரில் வீடு இருந்தது. அந்த வீட்டிற்குச் சிறுவனைக் கடத்தி சென்றனர். சிறுவனின் தந்தையிடம் போன் செய்து ரூபாய் 40 ஆயிரம் பணம் கேட்கத் திட்டமிட்டனர். ஆனால் தங்களது திட்டம் தோல்வியடைந்தால் சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த சிறுவர்கள், உடனே தங்களிடமிருந்த கைக்குட்டையால் சிறுவனை முகத்தில் அமுக்கி கொலைசெய்து அருகில் உள்ள ஆற்றில் உடலைத் தூக்கிப்போட்டனர். மறுநாள் அலிகரில் உள்ள ஆற்றில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சிறுவனின் பெற்றோர் அவனை அடையாளம் காட்டினர். சிறுவனைக் கொலைசெய்தவர்களைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரித்து வந்தனர். 100-க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், சிறுவனைக் கொலைசெய்த மாணவர்கள் பிடிபட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் முதலில் அவர்கள் விசாரணையை திசை திருப்ப முயன்றனர். ஆனால் தீவிர விசாரணைக்குப் பிறகு குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் விசாரித்ததில் டிவி சீரியல்களை பார்த்து இந்தக் கொலையைசெய்ய திட்டமிட்டதாக தெரிவித்தனர். சிறுவர்கள் 5 பேரும், 10-ம் வகுப்பு படிக்கின்றனர். அவர்களுக்கு 15 முதல் 16 வயது ஆகும். பிடிபட்ட சிறுவர்கள் 5 பேரையும் போலீஸார், சிறுவர் கூர்நோக்குப் பள்ளியில் சேர்த்தனர்.