பாலக்காடு : கேரளாவில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதலில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட தமிழ் பெண் அதிகாரி கூட்டுறவு சங்க தணிக்கை துறை அறிக்கையில் நேர்மையானவர் என்று நிரூபித்து மீண்டும் பணியில் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்துார் தாலுகாவில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். விவசாயம் கால்நடை வளர்ப்பு இவர்களின் முக்கியத் தொழிலாக உள்ளது.அங்குள்ள வடகரைபதியில் சாந்தலிங்க நகர் பால் பண்ணை சங்கம் செயல்படுகிறது. மஞ்சுளா என்ற தமிழ்ப்பெண் இந்த சங்கத்தின் செயலராக இருந்து சிறப்பாக நிர்வாகம் செய்து வந்தார்.
கடந்த 1995ல் கடும் வறட்சி ஏற்பட்டபோது அங்குள்ள மக்களின் பிழைப்புக்காக கால்நடை வளர்ப்பை கேரள அரசு ஊக்குவித்தது.அப்போது துவக்கப்பட்ட இந்த சங்கத்தில் முதலில் 300 லிட்டர் பால் கொள்முதல் நடந்தது. இப்போது தினமும் 4500 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.பாலக்காடு மாவட்டத்தில் ‘டாப் 10’ பால் பண்ணை சங்கங்களில் ஒன்றாகப் பெயர் பெற்றுள்ளது. காங். கட்சியைச் சேர்ந்த நிர்வாகக்குழுவே சங்கத்தை நிர்வகிக்கிறது.இதைக் கைப்பற்ற மதச்சார்பற்ற ஜனதா தள நிர்வாகிகள் தீவிர முயற்சி செய்துள்ளனர்.
இந்த அரசியல் மோதலில் மஞ்சுளா மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.அவருக்கு போதிய கல்வித்தகுதி இல்லை; தீவன ஒப்பந்தத்தில் 61 லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளார் என்று புகார்களை அடுக்கினர்.கடந்த ஆண்டில் கேரள அரசின் பால்வளத்துறை அவரை ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டது.
தன் நேர்மையையும் சங்கத்தை திறமையாக நடத்திய வழிமுறையையும் உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க மஞ்சுளா தொடர் முயற்சிகளை மேற்கொண்டார்.அதன் பலனாக கூட்டுறவுத் துறையின் தணிக்கைத் துறை ஆய்வு மேற்கொண்டு ஆவணங்களைப் பரிசீலித்து அறிக்கையை வெளியிட்டது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் ‘தீவன ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. மாறாக 2019 – 2020, 2020 – 2021 ஆகிய ஆண்டுகளில் சங்கம் 86.76 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.’மஞ்சுளாவின் கூட்டுறவுக் கல்வித் தகுதி அடிப்படையில் தான் பால்வளத்துறை அவரை நியமித்துள்ளது; எனவே ‘சஸ்பெண்ட்’ நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று தெளிவாகக் கூறப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக அவரை மீண்டும் பணியில் சேருமாறு பால்வளத்துறை உத்தரவு பிறப்பித்தது. கடந்த வாரத்தில் அவர் மீண்டும் சங்கத்தின் செயலராகப் பணியில் சேர்ந்துள்ளார்.கேரளாவில் தமிழ் பெண் அதிகாரி ஒருவர் அரசியல் மொழி இன அடிப்படையில் தனக்கு நேர்ந்த சோதனைகளை வென்று மீண்டும் பணியில் சேர்ந்தது கேரள தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுளா கூறுகையில் ”காங். நிர்வாகக்குழுவின் கீழ் செயல்படும் இச்சங்கத்தை கைப்பற்ற வேறு ஒரு கட்சியினர் திட்டமிட்டனர். அந்த அரசியல் மோதலால் நான் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டேன்.இப்போது தணிக்கை அறிக்கையில் முறைகேடு நடக்கவில்லை என்று என் நேர்மை நிரூபிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி. எனக்கு எதிராக நடந்த அநீதியை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறேன்” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement