சேலம்: மேட்டூர் அணை நடப்பாண்டில் முதல்முறையாக முழு கொள்ளளவான 120 அடியை நேற்று எட்டியது. அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி கரையோரங்களில் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கனஅடி உபரி நீர் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் 116.67 அடியை எட்டியது. அப்போது, அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 17,349 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. டெல்டா பாசனத்துக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் நேற்று காலை 9.55 மணி அளவில், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நடப்பாண்டில், மேட்டூர் அணை முதல்முறையாக நிரம்பியுள்ளது. மேலும், அணையின் வரலாற்றில் 42-வது தடவையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அணை நிரம்பியதையடுத்து, 16 கண் மதகுகள் பகுதியில், காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடு நடத்தி, உபரிநீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப்பொறியாளர் மதுசூதனன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, அணை நீரில் மலர்தூவி வணங்கினர். அதேநேரத்தில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றிரவு 7.30 மணி அளவில் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டது. அணையின் மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக, விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதமும், 16 கண் மதகுகள் வழியாக, விநாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதமும் நீர் வெளியேற்றப்படுகிறது.
கால்வாய் பாசனத்துக்காக அணையில் இருந்து பாசன நீரை, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி வரை உபரிநீர் திறக்கப்படுகிறது. அணை நிரம்பிவிட்டதால், அணைக்கு வரும் உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. எனவே, காவிரிகரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி, பொதுப்பணி ஆகிய துறைகளின் அதிகாரிகள் இணைந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆபத்தை விளைவிக்கும் வகையில் யாரும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள், செல்ஃபி எடுப்பதோ கூடாது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.