திருவனந்தபுரம்: பலாத்காரம் செய்யப்பட்டதால் 6 மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம், ஆலப்புழாவை சேர்ந்த 15 வயது சிறுமி, உறவினர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். ஒரு சில மாதங்களுக்குப் பின்னரே சிறுமி கர்ப்பிணியானது பெற்றோருக்கு தெரிய வந்தது. இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பலாத்காரம் செய்தவரை கைது செய்தனர். இந்நிலையில், 6 மாத கர்ப்பிணியான அந்த சிறுமியின் பெற்றோர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், தங்கள் மகளின் உடல்நிலை மோசமாக இருப்பதால் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று கோரப்பட்டது.இந்த மனு நீதிபதி அருண் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க உத்தரவிட்டார். நீதிபதி தன்னுடைய உத்தரவில், ‘சிறுமியின் உடல் நலனை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருந்தால் சிறுமியோ, அவரது உறவினர்களோ குழந்தையை ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அரசு பராமரிக்க வேண்டும். இது தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்,’ என தெரிவித்தார்.* மனிதாபிமானம்சாதாரணமாக 24 வாரங்கள் ஆன கருவை கலைக்க நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால், இந்த வழக்கில் சிறுமியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கேரள உயர் நீதிமன்றம் மனிதாபிமான அடிப்படையில் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.