பவானி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்படும் மரக்கட்டைகளை, வெள்ள அபாய எச்சரிக்கையை மீறி ஆற்றில் குதித்து இளைஞர்கள் சேகரிக்கின்றனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கு மாறு மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
நீலகிரி மற்றும் கேரள காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகக் கொண்டுள்ள பவானி ஆற்றின் குறுக்கே கோவை மாவட்டம் காரமடை அருகே பில்லூர் அணை அமைந்துள்ளது. மனிதநடமாட்டம் இல்லாத மலைக் காடுகளில்,பருவ மழைக் காலங்களில் பெய்யும் மழை நீர் கீழ் நோக்கி நீர்வழிப்பாதை வழியாக வழிந்தோடி அணையை அடைகிறது. காட்டாற்று வெள்ளமாக காடுகளின் வழியே, அருவிகளாய் பாய்ந்து வரும் தண்ணீர், வரும் வேகத்தில் வழியில் உள்ள மரங்களை சாய்த்து இழுத்துக் கொண்டு பில்லூர் அணையை வந்தடையும்.
இதனால் அணையில் தேக்கப்படும் தண்ணீரில் சிறியது முதல் பெரிய அளவிலான மரங்களின் கிளைகள் மதகுகள் ஓரம் அடைத்துக் கொண்டு நிற்கும். அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்றும் போது, தேங்கி நிற்கும் மரக்கட்டைகளும் நீரோடு சேர்ந்து பவானி ஆற்றில் செல்கின்றன. ஆற்றில் வரும் மரக்கட்டைகளை சேகரிக்கும் பணியில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘பில்லூர்அணையில் இருந்து வெளியேற்றப் படும் தண்ணீர், அதீத வேகத்தில் பவானி ஆற்றில் பாய்ந்து மேட்டுப்பாளையம் நகரைக் கடக்கிறது. முன்னரே, பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஆற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், அணையின் உபரி நீரும் இதில் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானி ஆற்றில் தற்போது வெள்ளநீர் கரைபுரண்டோடுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆற்றில் யாரும் இறங்கவோ, மீன்பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், உள்ளூரை சேர்ந்த சிலர் இந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் ஆற்று நீரில் அடித்து வரப்படும் மரக்கட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.பவானி ஆற்றின் கீழ் பகுதி, சந்தை கடை பகுதி, வனபத்ரகாளியம்மன் கோயில் சுற்றுப்புறப் பகுதிகளில் மரக்கட்டைகள் சேகரிப்பு அதிகளவில் நடக்கிறது. ஆற்றோரம் நீண்ட கம்புகளுடன் நிற்கும்இவர்கள், அதன் முனையில் கட்டியுள்ளவளைந்த அரிவாளின் உதவியோடு நீரில் மிதந்து செல்லும் மரக்கட்டை களை இழுத்து கரைக்கு கொண்டு வருகின்றனர். இழுக்க முடியாத சற்று பெரிய மரக்கட்டைகள் வந்தால் காட்டாற்று வெள்ளத்தில் குதித்து நீரின் போக்கில் சென்று அதனை இழுத்து கரைக்கு கொண்டு வருகின்றனர். சிறுகட்டைகளை விறகுகளாக பயன்படுத்த விற்கின்றனர். பெரியமரக்கட்டைகளை மர அறுவை ஆலைகளுக்கு விற்கின்றனர். இது போன்ற ஆபத்தான செயல்களை கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை தவிர்க்க வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மாலதி கூறும்போது, ‘‘பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்ஆட்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஆற்றில் வரும் மரக்கட்டைகளை எடுப்பது சட்டப்படி தவறு. இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.