கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஸ்ரீமதி, பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி கடந்த 13ஆம் தேதி பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் தவறு செய்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 4ஆவது நாளாக தொடர்ந்த போராட்டம் கலவரமாக மாறியது. மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் தங்கள் கண்ணில்பட்ட வாகனங்களையெல்லாம் அடித்து நொறுக்கினர். மேலும், அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்விசீ தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும் அவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கலவரக்காரர்களின் தாக்குதலில் ஒருசில போலீசார் காயம் அடைந்தனர்.
தற்போது அங்கு ஒரு டிஎஸ்பி உட்பட 350 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கலவரக்காரர்களை ஒடுக்க விழுப்புரம், கடலூர், சேலம் மாவட்ட காவல்துறையினர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போராட்டம் ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
newstm.in