புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்பி டி.ஆர். பாலு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறும்போது, “அக்னி பாதை திட்டம், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளோம்” என்று தெரிவித்தார்.
மக்களவை செயலகம் சார்பில் “தடை செய்யப்பட்ட சொற்கள்” பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு இந்தி, ஆங்கில சொற்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம், மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மத்திய அரசு சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவும் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துகிறார்.