இலவசங்களை காட்டி சில அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றன என பிரதமர் நரேந்திர மோடி கூறியதற்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ர்வால் பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்தலில் இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இது, நமது நாட்டு மக்களின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிவிடும். ஒருவருக்கு இனிப்பு கொடுத்து ஏமாற்றுவது போன்ற இந்த கலாச்சாரம், நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது” எனக் கூறினார்.
மோடியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மக்களுக்கு தரமான குடிநீர், மின்சாரம், சுகாதார வசதி முதலியவற்றை இலவசமாக வழங்குவது அவர்களை ஏமாற்றுவதற்காக அல்ல. மாறாக, அது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான கடமை என்பதை பலருக்கு இங்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். டெல்லியில் ஆம் ஆத்மி அரசு இதைதான் செய்து கொண்டிருக்கிறது.
டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரமானவையாக மாற்றப்பட்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் மொஹாலா கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே 2 கோடி மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கும் ஒரே மாநிலம் டெல்லி தான். ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான அறுவை சிகிச்சைகள் டெல்லி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்றன. அனைத்து மருத்துவமனைகளிலும் விபத்தில் சிக்கியவர்களுக்கான சிகிச்சை செலவை டெல்லி அரசே வழங்குகிறது. இதனால் இதுவரை 13,000 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இதுதான் இலவசத்தை காட்டி மக்களை ஏமாற்றுவதா?
டெல்லியில் 200 யூனிட் மின்சாரமும், பஞ்சாபில் 300 யூனிட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்தனை யூனிட்டுகளை ஏன் இலசமாக தருகிறீர்கள் என சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களிடம் நான் ஒன்றை கேட்கிறேன். உங்கள் அமைச்சர்களுக்கு எத்தனை யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகின்றன. 4000 யூனிட்டா அல்லது 5000 யூனிட்டா?
தங்கள் குடும்பத்தினருக்காக கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து பிரைவெட் ஜெட் வாங்கி வைத்திருப்பவர்கள் தான், பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை வழங்கியதற்காக என்னை கேலி செய்கின்றனர். இத்தனை திட்டங்களை அமல்படுத்திய போதிலும், டெல்லி அரசாங்கத்தின் கஜானா நிரம்பியே இருக்கிறது. ஊழலை ஒழித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மக்களுக்கு செலவு செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
இலவசம் என்றால் என்னவென்று நான் உங்களுக்கு கூறுகிறேன். ஒரு பெருநிறுவனம் அனைத்து வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றுக் கொள்கிறது. பின்னர் அந்தக் கடனை செலுத்தாமல் வங்கிகளை திவாலாக்குகிறது என வைத்துக் கொள்வோம். ஆனால், ஆளுங்கட்சிக்கு ஒரு பெரிய தொகையை கொடுத்து தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்தப் பெரு நிறுவனம் பார்த்துக் கொள்கிறது அல்லவா? அதுதான் இலவசம் கொடுத்து ஏமாற்றுவது என அர்த்தம். உங்கள் நண்பர்கள் கோடிக்கணக்கில் கடன் வாங்கியதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள் என்றால் அதுதான் இலவசம். வெளிநாடுகளுக்கு சென்று உங்கள் நண்பர்களுக்காக ஒப்பந்தம் பெற்றுத் தருகிறீர்கள் என்றால் அதுதான் இலவசம். இவ்வாறு அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக குறிப்பிட்டே கெஜ்ரிவால் இவ்வாறு பேசியிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM