மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் – துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைப்பெற்று வருகிறது.

15-வது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களம் இறக்கபட்டுள்ளார்.

கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை வந்த யஷ்வந்த் சின்ஹா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரினார்.

image
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்க, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.

முன்னதாக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, கொரோனா தொற்று காரணமாக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். மாநிலங்களவை எம்பி, மக்களவை எம்.பிக்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது.

மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாறுபடும். இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 208. தமிழ்நாட்டில் ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176.

தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு 41,184 ஆகும். இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.களின் மொத்த வாக்கு மதிப்பு 76,378.

மொத்த வாக்கு மதிப்பான 76,378-ல் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 62,884 ஆக உள்ளது. 133 எம்.எல்.ஏக்கள் மற்றும் 34 எம்.பி.களை கொண்ட திமுகவிற்கு மட்டும் 47,208 வாக்குகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் 8 எம்.பிக்கள் இருப்பதால் அக்கட்சியின் வாக்கு மதிப்பு 9,468 ஆக உள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 3,504 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2,104 வாக்குகளும் உள்ளன. ம.தி.மு.க 700 வாக்குகளைக் கொண்டுள்ளது.
செய்தியாளர் – எம்.ரமேஷ்

இதையும் படிக்கலாம்: இன்று வீடு திரும்புகிறார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.