நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் சாலைகளில் பெயர்ந்து விழுந்தும் மண் சரிவு ஏற்பட்டும் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கூடலூர் கோக்கால் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி திவ்யாவிற்கு, நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. கூடலூர் அரசு மருத்துவமனையில் இருந்த திவ்யாவை, ஊட்டியில் உள்ள சேட் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டியை நோக்கி விரைந்து கொண்டிருந்தபோது, ஆகாசபாலம் பகுதியில் சாலையின் குறுக்கே ராட்சத யூக்கலிப்டஸ் மரம் ஒன்று விழுந்து போக்குவரத்து தடைப்பட்டிருக்கிறது. மரத்தை அப்புறப்படுத்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் முயற்சி செய்துள்ளனர்.
இதற்கிடையில், இரவு 10.45 மணியளவில் கடுமையான பிரசவ வலியில் துடித்த திவ்யாவிற்கு, அவசரகால மருத்துவ டெக்னீஷியன்கள் ரதீஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் பிரசவம் பார்க்க முடிவெடுத்தனர்.
திக் திக் நிமிடங்களில், இரண்டு உயிர்களின் பொறுப்பை உணர்ந்து, பாதுகாப்பாக பிரசவம் பார்த்து, பிறந்த ஆண் சிசுவை நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் திவ்யாவிடம் ஒப்படைத்துள்ளனர். நல்ல முறையில் பிரசவம் முடிந்த நிலையில், திவ்யாவை மீண்டும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
போக்குவரத்து தடைப்பட்டிருந்த சூழலில் சாதுர்யமாக செயல்பட்ட மருத்துவ டெக்னீஷியன்கள் ரதீஷ், சதீஷ் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வீரமணி, மோகன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.