குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2002ஆம் ஆண்டில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, குஜராத் முழுவதும் கலவரம் வெடித்தது. ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.
காங்கிரஸ்
கட்சியின் முன்னாள் எம்.பி., இஷான் ஜாப்ரியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கலவரம் தொடர்பாக அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு அமைப்பினர், பிரதமர் மோடி உள்பட 64 பேரை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து, இஷான் ஜாப்ரியின் மனைவி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாத் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை உறுதி செய்தது.
குஜராத் கலவரத்தில் பெரிய சதி நடந்ததாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுவானது மறைமுக உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, 2002 குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி அவதூறு வழக்குகள் தொடர்ந்ததாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், குஜராத் முன்னாள் டிஜிபி ஆர்.பி.ஸ்ரீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மீதும் குஜராத் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் தனது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கையில், “கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துக்குப் பின், மாநில அரசை கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த அகமது படேல் சதி திட்டம் தீட்டினார். அதில் தீஸ்தா சீதல்வாட்டுக்கும் பங்கு உண்டு. குஜராத் கலவர வழக்கில், பாஜக மூத்த தலைவர்களை தவறாக சிக்கவைக்க, இவர் டெல்லியில் ஆட்சியில் இருந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை அடிக்கடி சந்தித்தார். இதற்காக அந்த கட்சியிடமிருந்து சட்ட விரோதமாக பணம் மற்றும் வெகுமதிகளை பெற்றார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த அகமது படேல் மூலமாக, குஜராத் கலவரத்துக்கு பின்னர், பாஜக அரசை கவிழ்க்கவும், அப்போதைய முதல்வர் மோடியின் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் சோனியா காந்தி செயல்பட்டார்.” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
நாடு முழுவதும் இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சி, “2002ஆம் ஆண்டில் குஜராத் முதல்வராக இருந்தபோது கட்டவிழ்த்து விடப்பட்ட வகுப்புவாத படுகொலைக்கான பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பிரதமர் மோடியின் முறையான உத்தியின் ஒரு பகுதி.” என கடுமையாக சாடியுள்ளது.