வத்தக்குழம்பு, கதம்ப சாம்பார், பாதாம் அல்வா… வீக் எண்டு கல்யாண விருந்து ஸ்பெஷல்!

கதம்ப சாம்பார்

தேவையானவை:

துவரம்பருப்பு – 150 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 3
கத்திரிக்காய் – 3
பீன்ஸ் – 50 கிராம்
தக்காளி – 4
முருங்கைக்காய் – 1
சௌசௌ – 1
அவரைக்காய் – 50 கிராம்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
பொடித்த வெல்லம்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

கதம்ப சாம்பார்

தாளிக்க:

கடுகு – சிறிதளவு
உளுந்து – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
நெய் – 25 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு

அரைக்க:

காய்ந்த மிளகாய் – 7
தனியா (மல்லி) – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – அரை டேபிள்ஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
தேங்காய் – கால் மூடி

செய்முறை:

துவரம் பருப்பை கழுவி சுத்தம் செய்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும். காய்களை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருள்களை லேசாக வறுத்து தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இத்துடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய காய்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து கரைய வதக்கி, அரைத்த பேஸ்ட் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் கரைத்த புளித் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும் வேகவைத்த பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும். இறக்கும்போது பொடித்த வெல்லம், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

மைசூர் ரசம்

மைசூர் ரசம்

தேவையானவை:

பருப்பு வேகவைத்த தண்ணீர் – ஒன்றரை லிட்டர்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – 2
பூண்டு – 5 பல்
கடுகு – சிறிதளவு
உளுந்து – அரை டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

அரைக்க:

கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
சீரகம் – அரை டீஸ்பூன்

செய்முறை:

அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தட்டிய பூண்டு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இத்துடன் கரைத்த புளித் தண்ணீரை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கொதிக்க வைத்து, பருப்புத் தண்ணீரைச் சேர்க்கவும். லேசாக நுரைத்து வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

மைசூர் போண்டா

தேவையானவை:

உளுந்து – கால் கிலோ
பச்சை மிளகாய் – 2
மிளகுத்தூள்- ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
பொரிகடலை (பொட்டுக்கடலை) மாவு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி – ஒரு துண்டு

மைசூர் போண்டா

செய்முறை:

உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் எண்ணெய் தவிர்த்து தேவையானவற்றில் கொடுத்த மற்ற எல்லாப் பொருள்களையும் சேர்த்து வடை மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவும். மாவை உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால் போண்டா ரெடி.

பாதாம் அல்வா

தேவையானவை:

பாதாம் – அரை கிலோ
சர்க்கரை – அரை கிலோ
நெய் – 150 கிராம்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பால் – 100 மில்லி
குங்குமப்பூ – சிறிதளவு
பிஸ்தா – அலங்கரிக்க

பாதம் அல்வா

செய்முறை:

பாதாமை சுடு நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அதன் தோலை உரித்து, பாலுடன் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, 50 கிராம் நெய்யை ஊற்றி உருகியதும், பாதாம் கலவையை சேர்த்துக் கிளறவும். பிறகு, சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கிளறவும். சர்க்கரை உருகி கலவை கெட்டியானதும், மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். கலவை சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி குங்குமப்பூ தூவி, பிஸ்தா பருப்புகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.

மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை:

சின்ன வெங்காயம் – 50 கிராம்
பூண்டு – 15 பல்
புளி – பெரிய எலுமிச்சை அளவு
மணத்தக்காளி வற்றல் – 5 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைக்க:

காய்ந்த மிளகாய் – 5
மல்லி (தனியா) – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1

மணத்தக்காளி வற்றல் குழம்பு

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ளவற்றை எல்லாம் வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும். மணத்தக்காளி வற்றல், வெள்ளைப்பூண்டை எண்ணெயில் தனித்தனியே வதக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.

இத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, அரைத்த கலவை, உப்பு சேர்க்கவும். கலவையின் பச்சை வாசனை போனதும், வதக்கிய மணத்தக்காளி வற்றல், பூண்டு சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்றாக வெந்து குழம்பு கொஞ்சம் கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.