துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.). வருங்கால போட்டி அட்டவணையில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2½ மாதங்கள் ஒதுக்கப்படும் என்றும், அதற்காக பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடம் பேசி இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் 2023-ம் ஆண்டு மே முதல் 2027-ம் ஆண்டு ஏப்ரல் வரை நடைபெறும் சர்வதேச கிரிக்கெட்டுக்கான உத்தேச போட்டி அட்டவணையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு என்று 2½ மாதங்களை ஐ.சி.சி. ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஐ.பி.எல். நடக்கும் இந்த இரண்டரை மாதங்களில் வேறு எங்கும் சர்வதேச போட்டிகள் இருக்காது. வழக்கமாக ஐ.பி.எல். கிரிக்கெட் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாதம் வரை நடை பெறும். இனி ஜூனிலும் முதல் 2 வாரங்கள் நீடிக்கும்.
ஐ.பி.எல். போட்டிக்கு கூடுதல் நாட்கள் ஒதுக்கப்படுவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் மற்ற நாடுகளின் ஆதரவு இருப்பதால் ஐ.சி.சி.யின் போட்டி அட்டவணைக்கு ஒப்புதல் கிடைத்து விடும். வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் பர்மிங்காமில் நடக்கும் ஐ.சி.சியின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அட்டவணை இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.