சென்னை/ திருப்பூர்: அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அரிசி வியாபாரிகள், ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால், 4 ஆயிரம் அரிசி ஆலைகள், 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன.
பையில் அடைத்து விற்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்தவேண்டும் என்று கடந்த மாதம் 28, 29-ம் தேதிகளில் சண்டீகரில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கத்தின் சம்மேளனம் சார்பில் நேற்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், அரிசி கடைகள் நேற்று காலை 6 முதல் மாலை 6 மணி வரை அடைக்கப்பட்டிருந்தன. சென்னையில் வடபழனி, விருகம்பாக்கம், சூளைமேடு, அடையாறு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரிசி சில்லறை, மொத்த விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்படவில்லை.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர்கள் சங்கத்தின் சம்மேளன தலைவர் துளசிங்கம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் அரிசி ஆலைகள், 20 ஆயிரம் சில்லறை விற்பனை கடைகள், 10 ஆயிரம் மொத்த விற்பனைக் கடைகளை அடைத்து வணிகர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 1 லட்சம் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ரூ.200 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகும் அரிசிக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், சங்க நிர்வாகிகளுடன் கலந்துபேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர்களிடம் கோரிக்கை
தமிழ்நாடு அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கத் தலைவர் கே.பி.சக்திவேல் கூறியதாவது:
பையில் அடைத்து விற்கும் அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் அரிசி விலை உயர்ந்து, நடுத்தர குடும்பங்கள் வெகுவாக பாதிக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள 3,500-க்கும் மேற்பட்ட ஆலைகளில் தினமும் 52,500 டன் உற்பத்தி நடக்கிறது. ஆலைகளில் நேரடியாக 70 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். சுமார் 2 லட்சம் பேர் இத்தொழிலை சார்ந்துள்ளனர். விலை உயர்வால் அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.
ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்துதான் தமிழகத்துக்கு தேவையான அரிசியில் 50 சதவீதம் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அந்த ரக அரிசி விலை ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், ஜிஎஸ்டியும் விதிப்பதால் மீண்டும் விலை உயரும். ஜிஎஸ்டி வரியை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நிதி அமைச்சர், இணை அமைச்சர், தமிழக நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.