இன்று வீடு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தொடர்ந்து, காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்த காரணமாக கடந்த 14-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா அறிகுறியால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அத்துடன், முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.தற்போது அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மக்களின் அன்பு..! மருத்துவர்களின் கனிவு..! நலமுடன் தொடர்கிறேன் பணியினை! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும் தமிழ்நாட்டுப் பொதுமக்களுக்கும் உங்களில் ஒருவன் எழுதும் மடல். கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்டசெய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும்நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்லசெய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1

தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு நலன் விசாரித்தனர்.பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கடிதம் மூலமாக நலம் விசாரித்தனர். அந்தக் கடிதங்களை எல்லாம் தொடர்ந்து படித்து வருகிறேன். மருத்துவர்கள் அளித்த சிகிச்சையுடன் அந்தக் கடிதங்களும் உடலுக்கும் மனதுக்குத் தெம்பு தந்தது. எடுத்துக்காட்டாக, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில்இருக்கும் பெரியசோரகையிலிருந்து தங்கராஜ் எனும் உடன்பிறப்பு எழுதிய கடிதத்தில்,”எங்களின் சக்திவாய்ந்த திராவிட மாடல் முதலமைச்சரை எந்தச் சக்தியும் நெருங்காது”எனக் குறிப்பிட்டு, மிகுதியான அன்போடு, தனக்குத் தெரிந்த கை வைத்திய முறைகளையெல்லாம் குறிப்பிட்டு அனுப்பியிருந்தது நெகிழ வைத்தது. மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் காரணமாக நலமடைந்திருக்கிறேன் என்று தங்கராஜ் அவர்களுக்கு அதே அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுபோல எண்ணற்ற கடிதங்கள்என் உடல்நலன் மேல் அக்கறை கொண்டு எழுதப்பட்டிருப்பதுடன், எனக்குள்ள பெரும் பொறுப்பையும் உணர்த்தக் கூடியதாக இருந்தது. முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே, மருத்துவ அறிவியல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்பதால் இந்தக் கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருமலும் சளியும் மட்டும் இருந்ததால், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. மருத்துவர் மோகன் காமேஸ்வரன், மருத்துவர் அரவிந்தன், மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., மருத்துவர் தீரஜ் என இந்த நான்கு மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் என்னை தினமும் நல்ல முறையில் கவனித்து, விரைந்துநலம் பெற உதவினார்கள். அவர்களுக்கும் அவர்களுடன் துணைநின்ற மருத்துவக் குழுவினருக்கும் இந்தக் கடிதத்தின் வாயிலாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

DMK's oppn to Centre a part of its anti-Modi campaign strategy

திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். இருப்பினும், ஒருவார காலத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருக்க சம்மதித்தாலும், ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை. உங்களில் ஒருவனான என்னை நம்பி, தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பெரும் பொறுப்பினை உணர்ந்து, முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை, கவனிக்க வேண்டிய கோப்புகளை, எடுக்க வேண்டிய முடிவுகளை, செயல்படுத்த வேண்டிய திட்டங்களை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடிதான் இருப்பேன். 

திங்கட்கிழமையன்று குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு நேரில் சென்று வாக்களித்துவிட்டுத் திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதே நாளில் (சூலை 18) தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது. நம்முடைய மாநிலத்திற்குப் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டி, அதற்கான தீர்மானத்தை முதலமைச்சராக அவர் சட்டமன்றத்தில் முன்மொழிந்து, ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தீர்மானத்தை  நிறைவேற்றிய நாள்தான் சூலை 18. பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு என்று மூன்று முறை சொல்ல, அனைத்து உறுப்பினர்களும் ‘வாழ்க.. வாழ்க.. வாழ்க’ என்று முழங்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை இந்தியத் துணைக் கண்டத்திற்கு உணர்த்திய நாள். அந்த நாளினை, உங்களில் ஒருவனான எனது தலைமையிலான நமது அரசு, ‘தமிழ்நாடு நாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடத் தீர்மானித்திருப்பதால், சென்னை கலைவாணர் அரங்கில் ‘தமிழ்நாடு திருநாள்’ என்ற நிகழ்வு திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது. 

சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகத்தான நாளுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன். தமிழ்நாடு என்ற பெயரால் மட்டுமல்ல, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் விளைவினாலும் நம் மாநிலத்திற்குப் பெருமைகளைச் சேர்த்துவருகிறோம். அதில் ஒரு பெருமையாகத்தான், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். செஸ் ஆட்டத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்திடும் வகையில் முன்னோட்ட நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணொலியும் வெளியிடப்பட்டு இளைஞர்கள், மாணவர்களிடம் செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. திருச்சியில் 2140 பேர் கலந்துகொண்ட செஸ்போட்டி உலக சாதனை புரிந்திருக்கிறது. 

மாண்புமிகு இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் சூலை 28 அன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்த நிகழ்வினைத் தொடங்கிவைத்துச் சிறப்பிக்க இருக்கிறார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற செஸ்சாம்பியன்களும், இளம் வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்கான ஆயத்தமும் ஆர்வமும் இப்போது வெளிப்படத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது. ‘வருக.. வருக.. தமிழ்நாட்டுக்கு வருக…’ என ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அமைந்த முன்னோட்டக் காணொலியைத் தொடர்ந்து, அதன் முழுப் பாடலும் அடங்கிய காணொலி விரைவில் வெளிவர இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளால் முழுமையான உடல்நலத்துடன் உங்களில் ஒருவனான நான் பங்கேற்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

Union govt creating economic crisis for states: MK Stalin | The News Minute

முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமந்து, நாட்டு நடப்பைக் கவனிப்பது போலவே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஜனநாயகப் பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பினையும் சுமந்திருப்பதால், கழகப் பணிகளையும் மருத்துவமனையிலிருந்தபடியே கவனித்து வந்தேன்.கழக அமைப்புத் தேர்தல்கள் ஒன்றிய அளவில் முடிவுற்று, ஓரிரு இடங்களில் ஏற்பட்ட சின்னச் சின்ன சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விரைவில் முழுமையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, பகுதி கழகச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் நடத்தி முடித்து, நமக்கான இலட்சியப் பாதையில் பயணித்து, மக்களுக்கான பணியினைக் கழகத்தினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய அன்பு வேண்டுகோள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சைவத் தமிழ்நெறி பாடிய திருநாவுக்கரசர் கூறியது போல, ‘என் பணி மக்கள் தொண்டாற்றுவதே’ என்று உறுதியேற்று செயலாற்றி வருகிறேன். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும், உலக நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய மாநிலமாகவும் உயர்த்த வேண்டும் என்பது என் பெருங்கனவு. அதனை அடைய வேண்டுமென்றால் இப்போது உழைப்பதை விடவும் இன்னும் அதிகமாக உழைத்திட வேண்டும். 
நான் மட்டுமல்ல, நம்முடைய அரசில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் அயராது உழைத்திட வேண்டும். ஆளுங்கட்சி என்ற முறையில் கழகத்தினர் ஒவ்வொருவருக்கும் கூட அந்தப் பொறுப்பு இருக்கிறது. உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கான உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும். நம் பாதையில் நாம் உறுதியாகப் பயணிப்போம். சில அரைவேக்காடுகள் குறுக்கும் நெடுக்குமாக விமர்சனச் சேற்றை வீசியபடி ஓடும். நாம் சற்று ஒதுங்கிக் கொண்டு, அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். நம்மைத் தாக்கி, அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக்கூடாது. அரசியல் பாதையில் குறுக்கிடும் அத்தகைய பேர்வழிகளை, இடக்கையால் புறந்தள்ளி நாம் முன்னேறிச் செல்வோம். நான் ஏற்கனவே திருவண்ணாமலையில் சொன்னபடி ‘I Don’t care’ என்று அவர்களை அலட்சியப்படுத்துங்கள். வம்படியாகப் பேசி விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்போரைத் தவிர்த்து, நம் வழியில் பயணிப்போம். மக்களுடன் நாம் எப்போதும் இருப்போம். மக்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.