இலங்கை முழுதும்… எமர்ஜென்சி!; நாளை அதிபர் தேர்தல்| Dinamalar

கொழும்பு, : இலங்கை அதிபர் பதவிக்கு நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நாடு முழுதும் மீண்டும் அவசர நிலையை பிறப்பித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.தற்காலிக அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார்.

அனைத்துக் கட்சிகள் கோரிக்கையை ஏற்று, நாளை அதிபர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. கோத்தபய ராஜபக்சேவின் மீதமுள்ள பதவிக் காலமான, 2024, நவ., வரை புதிய அதிபர் பதவி வகிப்பார். இந்தத் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு தற்போது ஆளும் இலங்கை பொதுஜன பெரமுணா ஆதரவு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா, ஜனதா விமுக்தி பெரமுணா தலைவர் அனுரா குமார திசநாயகே மற்றும் இலங்கை பொதுஜன பெரமுணாவில் இருந்து பிரிந்து சென்ற டல்லாஸ் அழகப்பெருமா ஆகியோரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.இத்தேர்தலையொட்டி, தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாடு முழுதும் அவசர நிலையை பிறப்பித்துள்ளார். இது, நேற்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய அரசு அமைவதற்கு, அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த விஷயத்தில் நமக்கு ஒற்றுமை அவசியம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், அதன் பயன் நம் மக்களுக்கும் கிடைக்கும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். நாட்டில், 2 ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் போராட்டம்

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, சில நாட்களுக்கு முன் சிங்கப்பூருக்கு வந்தார். அவருடைய வருகைக்கு, சிங்கப்பூரில் உள்ள தமிழர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து, இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிங்கப்பூர் அரசின் சமூக வலைதளங்களிலும் பலர் எதிர்ப்பை அமைதியான முறையில் பதிவு செய்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.